/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிஜிட்டல் வரைபடமாகும் வரையாடுகள் வாழ்விடம்
/
டிஜிட்டல் வரைபடமாகும் வரையாடுகள் வாழ்விடம்
ADDED : அக் 02, 2025 08:33 PM
பொள்ளாச்சி:கோடை மற்றும் மழை காலத்தில், வரையாடுகள் பயணிக்கும் பகுதிகள் 'ஜியோ டேக்' செய்து 'டிஜிட்டல்' வரைபடமாக தயாரிக்கப்படுகிறது.
வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசால், வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், மனித- - வனவிலங்கு மோதலைக் குறைப்பது, வேட்டையாடுதலை தடுப்பது, சீரழிந்த வாழ்விடங்களை மீட்டெடுப்பது, அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஏற்கனவே, ஒவ்வொரு விலங்குகளின் வாழ்வியல் சூழலும் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.அந்த வரிசையில், தமிழகத்தில், 'வரையாடுகள் பாதுகாப்பு' என்ற தனித் திட்டம் உருவாக்கப்பட்டு, மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், முதன்முறையாக வரையாடுகளின் வாழ்விடம், அதன் சூழலைக் கண்டறியும் வகையில், அவற்றின் கழுத்தில் 'ரேடியோ காலர்' பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.
அதன்படி, ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி அருகே வால்பாறை மலைப்பாதையில், 9வது கொண்டை ஊசி வளைவில் உலா வரும், 2 வரையாடுகளின் கழுத்தில், 'ரேடியோ காலர்' பொருத்தப்பட்டுள்ளது.
வரையாடுகள் பாதுகாப்பு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் தலைமையிலான வனக்குழுவினர், ஜி.பி.எஸ்., வாயிலாக அவை எங்கெல்லாம் பயணிக்கின்றன, மற்ற கூட்டத்துடன் இணைந்து தகவல் பரிமாற்றம் மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றனவா உள்ளிட்ட பதிவுகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
அதேபோல, கோடை மற்றும் மழை காலத்தில், வரையாடுகள் பயணிக்கும் பகுதிகள் 'ஜியோ டேக்' செய்து 'டிஜிட்டல்' வரைபடமாக தயாரிக்கப்படுகிறது. வரையாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், அவற்றின் வாழ்விடத்தின் நிலை, அங்குள்ள ஆக்கிரமிப்பு அல்லது மனித நடமாட்டம், உணவாகும் தாவரங்களின் அடர்த்தியும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் முழுமை பெற்றால், வரையாடுகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, இடம்பெயரும் பரப்பை எளிதாக அறிய முடியும் என்கின்றனர் வனத்துறையினர்.