/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
"இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை'
/
"இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை'
ADDED : ஜூலை 26, 2011 09:25 PM
கோவை : 'இயற்கை குறித்த விழிப்புணர்வை அடித்தட்டு மக்கள் வரை, மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்' என பிரமோத் பேசினார்.கோவை ஜி.ஆர்.டி.,கல்லூரியில் 'பயோ-சயின்ஸ்' அசோசியேசன் விழாவை துவக்கி வைத்து, ஆனைக்கட்டி 'சலிம்அலி சென்டர் பார் ஆர்மித்லாலஜி அண்ட் நேச்சுரல் ஹிஸ்டரி' விஞ்ஞானி பிரமோத் பேசியதாவது: இயற்கை வளத்தில் உலகநாடுகளில் இந்தியா முதன்மையாக உள்ளது.
உலகநாடுகள் பொறாமைப்படும் அளவில், இந்திய வனங்களில் எண்ணற்ற இயற்கை செல்வங்கள் நிரம்பி கிடக்கின்றன. இதில் வாழும் விலங்குகள், பறவை இனங்கள், காடுகளை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை அடையாளத்தை எடுத்து செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் உள்ளது.இயற்கை பற்றிய அக்கரை சிறிது இல்லாத காரணத்தினால், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாமே அழித்து வருகிறோம். நம்மை சுத்தப்படுத்தும் நீர், காற்று, மண் போன்ற முப்பொருளையும் சுயநலத்திக்காக மாசுபடுத்தி வருகிறோம். நகரங்கள் விரிவடைந்து வருவதால் காடுகளின் அளவு குறைந்து மனிதனின் மனம் போல குறுகிக் கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தாம்தான் மிகப்பெரிய உயிரினம் என்று எண்ணிய டைனோசரை போன்று மனித இனமும் தடம் தெரியாமல் அழியும் சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகலாம்.நாட்டின் பசுமையை காக்க, பெங்களூர் நகர வீடுகளில் வீட்டுக்கு இரண்டு மரங்கள் வளர்க்கும் முற்போக்கு சிந்தனை உள்ளது. அச்சிந்தனை எல்லோருடைய மனத்திலும் உதிக்க வேண்டும். அதை நடைமுறையிலும் கொண்டு வரவேண்டும்.இன்றைய மாணவர்கள் படிப்போடு நின்று விடாமல் இயற்கை சார்ந்த புரிதலை வளர்த்து கொள்ள வேண்டும். அனுபவத்தின் மூலம் தெரிந்து வைத்திருக்கும் மலைவாழ் மக்களுடன், நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு இயற்கையை தெரிந்து கொள்ள வேண்டும். மலைவாழ் மக்களோடு அழிந்துபோகும் இயற்கை உண்மைகளை வெளிக்கொணர்ந்து உலகிற்கு தெரிவிக்க வேண்டும். அனுபவமும் கல்வியும் ஒன்று சேரும்போது இயற்கை பற்றிய மாற்று சிந்தனை பிறக்கும்.இவ்வாறு, பிரமோத் பேசினார்.கல்லூரி ஆலோசகர் லட்சுமணன் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னுசாமி வரவேற்றார். பேராசிரியை ÷ஷாபனா நன்றி கூறினார்.