ADDED : ஆக 11, 2011 11:36 PM
குறிச்சி : மதுக்கரை மார்க்கெட் அருகேயுள்ள, மேட்டாங்காடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மதுக்கரை மார்க்கெட் அருகேயுள்ள மேட்டாங்காடு, இந்திரா நகர், எம்.ஜி.ஆர்., நகர், அம்பேத்கர் நகர் மற்றும் ராஜேஸ்வரி நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு 48சி, 3ஏ, மற்றும் 18 ஆகிய வழித்தட எண்கள் கொண்ட டவுன் பஸ்கள் இயங்கின. இதன்மூலம், டவுன் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பணிகளுக்கு செல்வோர் அந்தந்த பகுதிகளுக்கு சென்று, வந்தனர். 48சி டவுன் பஸ் காந்திபுரத்திலிருந்து, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட், கடை வீதி, மேட்டாங்காடு, செட்டிபாளையம் பிரிவு வழியாக வேலந்தாவளம் சென்று, வந்தது. தற்போது ஆத்துபாலம், குனியமுத்தூர், மதுக்கரை, மரப்பாலம், க.க.சாவடி வழியாக வேலந்தாவளம் சென்று விடுகிறது. கணபதியிலிருந்து இயக்கப்பட்ட 3ஏ பஸ், காலை 7.00, மதியம் 1.00, மாலை 5.00 மற்றும் இரவு 7.00 மணி டிரிப்களில் மட்டும் மதுக்கரை, ஏ.சி.சி.,குடியிருப்பு, மதுக்கரை மார்க்கெட் சென்று மீண்டும் மேட்டாங்காடு வழியாக மரப்பாலம் சென்றது; தற்போது, மதுக்கரை மார்க்கெட் வரை மட்டுமே இயங்குகிறது. ரத்னபுரியிலிருந்து இயக்கப்பட்ட பஸ் (வழித்தடம் எண்: 18) குனியமுத்தூர், மதுக்கரை, மரப்பாலம், செட்டிபாளையம் பிரிவு வழியாக மேட்டாங்காடு, மதுக்கரை மார்க்கெட் சென்றடையும். அங்கிருந்து மீண்டும் கடை வீதி வழியாக பாலத்துறை, ராயகவுண்டனூரை சென்றடையும். தற்போது ஏ.சி.சி., குடியிருப்பு, மதுக்கரை மார்க்கெட் மீண்டும் கடை வீதி வழியாக ராயகவுண்டனூரை சென்றடைகிறது. கடந்த இரண்டாண்டுகளாக மேற்குறிப்பிட்ட வழியாகத்தான் பஸ்கள் இயங்குகின்றன. இதனால், மேட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், வெளியிடங்களுக்கு செல்ல, அரை கி.மீ., முதல் ஒன்றரை கி.மீ., தூரம் வரையுள்ள 'சைடிங் கேட்' பகுதிக்கு நடந்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, பாலக்காடு - போத்தனூர் செல்லும் ரயில்வே லைனை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இவ்விடம் வளைவான பகுதியாக உள்ளதால், பலர் ரயில் வருவது தெரியாமல் நடந்து சென்று, விபத்துக்குள்ளாகியுள்ளனர். மேற்குறிப்பிட்ட பஸ்களை மீண்டும் இப்பகுதிக்கு இயக்ககோரி, போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், கடந்த இரு மாதங்களுக்கு முன், இப்பகுதியை சேர்ந்தோர் மனு கொடுத்தனர். ஒரு மாதத்துக்கு முன், எம்.எல்.ஏ., தாமோதரனிடமும் மனு கொடுத்தனர்; எம்.எல்.ஏ., போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார். 20 நாட்களுக்கு முன், அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், வழித்தடத்தை ஆய்வு செய்தனர்; மேட்டாங்காடு, நைட்டிங்கேல் செவிலியர் கல்லூரி ஆகிய இரு இடங்களில் பஸ்களை நிறுத்திச் செல்வது எனவும் முடிவு செய்தனர். இதுவரை பஸ்கள் இயக்கப்படவில்லை. உயிர்ப்பலி ஏற்படும் முன், போக்குவரத்து துறை அதிகாரிகள், பஸ்களை இயக்குவார்களா என்பதே, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.