/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச பொருட்கள் நியாயமான விலையில் கொள்முதல்: அமைச்சர் வேலுமணி
/
இலவச பொருட்கள் நியாயமான விலையில் கொள்முதல்: அமைச்சர் வேலுமணி
இலவச பொருட்கள் நியாயமான விலையில் கொள்முதல்: அமைச்சர் வேலுமணி
இலவச பொருட்கள் நியாயமான விலையில் கொள்முதல்: அமைச்சர் வேலுமணி
ADDED : செப் 16, 2011 10:01 PM
பொள்ளாச்சி : 'இலவச பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், நியாயமான விலையிலும் கொள்முதல் செய்வதால், மக்கள் வரி பணம் வீணாவதில்லை' என, அமைச்சர் வேலுமணி பேசினார்.
பொள்ளாச்சி, ஏ.நாகூர் ஊராட்சிக்குட்பட்ட கரப்பாடியில் பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது. விழாவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மனோகர் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்து பேசுகையில், ''தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் தற்போதைய அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பகுதிகளிலுள்ள பயனாளிகளுக்கும் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஏ.நாகூர் ஊராட்சிக்குட்பட்ட கரப்பாடியில், முதல்கட்டமாக இலவச ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, அரிசி வாங்கும் ரேஷன் கார்டுகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவை வழங்கப்படும். அதேபோல், மாற்று திறனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை, 30 ஆயிரத்து 327 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை பயனாளிகள் சரிவர பயன்படுத்த வேண்டும்'' என்றார். ஆடுகள் பெற்ற பயனாளிகளுக்கு, காப்பீடு அட்டை வழங்கி தமிழக தொழில்துறை அமைச்சர் வேலுமணி பேசியதாவது: தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், தற்போதுள்ள அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக, பலர் பெண் பயனாளிகளாக இருப்பதால், திட்டம் எளிதாக சென்றடைகிறது. கடந்த ஆட்சியில், 700 ரூபாய் மதிப்புக்கு கலர் 'டிவி'யை பெற்று, 2,100 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். ஆனால், தற்போது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களும் அனைத்தும் தரமானதாகவும், நியாமான விலையிலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணாக்காமல் நியாயமாக மட்டுமே செலவு செய்யப்படுகிறது. மக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதற்கு மக்கள் தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் விரைவில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். மக்களும் அரசின் திட்டத்தை சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். விழாவில், இலவச ஆடுகள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு தலா நான்கு ஆடுகளும், காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது.
இதில், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயராமன், முத்துகருப்பண்ணசாமி, தாமோதரன், எம்.பி., சுகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், சப்-கலெக்டர் அருண் சுந்தர்தயாளன், தாசில்தார் சின்னப்பையன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் சிவபிரகாசம், பொள்ளாச்சி கோட்ட உதவி இயக்குனர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அல்லாபிச்சை, குருராகவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.