/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.15 கோடிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.1.15 கோடிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 18, 2011 10:16 PM
திருப்பூர் : அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த
விழாவில், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, திருமண உதவி தொகை
உள்ளிட்ட திட்டங்களில், 1,253 பயனாளிகளுக்கு, 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மாணவ, மாணவியருக்கான சிறப்பு ஊக்கத்தொகை
வழங்கும் விழா, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கஜலட்சுமி வரவேற்றார். ஊரக
தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு, எம்.பி., சிவசாமி, எம்.எல்.ஏ., ஆனந்தன்
உள்ளிட்டோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். திருப்பூர் மாவட்டத்தில்
10ம் வகுப்பு படிக்கும் 24 ஆயிரத்து 167 மாணவ, மாணவியருக்கும், பிளஸ் 1
படிக்கும் 16 ஆயிரத்து 106 மாணவ, மாணவியருக்கும், தலா 1,500 ரூபாய்
ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பிளஸ் 2 படிக்கும் 15 ஆயிரத்து 2 மாணவ,
மாணவியருக்கு தலா 2,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில்
55 ஆயிரத்து 275 மாணவ, மாணவியருக்கு ஒன்பது கோடியே நான்கு லட்சத்து 13
ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை பெறுகின்றனர்.முதல்கட்டமாக,
அனுப்பர்பாளையம் பள்ளியில் நடந்த விழாவில், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர்
273; பிளஸ் 1 மாணவ, மாணவியர் 159; பிளஸ் 2 மாணவ, மாணவியர் 157 என 589
பேருக்கு, 9.62 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான பத்திரங்கள்
வழங்கப்பட்டன.மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்
தொகை, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்களின்
வாயிலாக, 414 பயனாளிகளுக்கு 12 லட்சத்து 46 ஆயிரத்து 810 ரூபாய் மதிப்பிலான
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 13
ஒன்றியங்களை சேர்ந்த 250 பயனாளிகளுக்கு திருமண உதவி தொகை, நான்கு கிராம்
தங்க காசுகள் வழங்கப்பட்டன. இதில், 120 பயனாளிகளுக்கு தலா 50 ஆயிரம்
ரூபாய், 130 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், அத்துடன் நான்கு கிராம்
தங்க காசுகள் பெற்றனர். மொத்தமாக, 92.50 லட்சம் ரூபாய், 125 சவரன் தங்க
காசுகள் வழங்கப்பட்டன.