/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொண்டைக்கடலை நேரடி கொள்முதல்: விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கொண்டைக்கடலை நேரடி கொள்முதல்: விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொண்டைக்கடலை நேரடி கொள்முதல்: விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொண்டைக்கடலை நேரடி கொள்முதல்: விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 11, 2025 09:02 PM
குடிமங்கலம்; கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு முற்றிலுமாக காணாமல் போவதை தடுக்க, அறுவடை சீசனில், கடலையை அரசு நேரடி கொள்முதல் செய்ய, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழை சீசனில், முன்பு பிரதானமாக கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. மானாவாரியாக, விருகல்பட்டி, கொங்கல்நகரம், தொட்டம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில், 3 ஆயிரம் ெஹக்டேருக்கும் அதிகமான பரப்பில், கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இச்சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது.
சாகுபடிக்கு தேவையான விதைகளை, விவசாயிகளே இருப்பு வைத்து பயன்படுத்துகின்றனர். மேலும், பல்வேறு நோய்த்தாக்குதலால், விளைச்சலும் குறைந்து விலையும் கிடைப்பதில்லை.
இதனால், வடகிழக்கு பருவமழை சீசனில், பிரதானமாக இருந்த இச்சாகுபடி, முற்றிலுமாக காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில், இச்சாகுபடிக்கான பணிகள் துவங்க உள்ள நிலையில், வேளாண்துறையினர் சிறப்பு கவனம் செலுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: கொண்டைக்கடலை சாகுபடியில், ஏக்கருக்கு, நுாறு கிலோ கொண்ட 8 மூட்டை அளவுக்கு முன்பு விளைச்சல் இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல், 4 மூட்டையை தாண்டவில்லை. களிமண்ணில் மட்டும் விளையும் பிரத்யேக சாகுபடியாக இருப்பதால், நஷ்டம் ஏற்பட்டாலும், கொண்டைக்கடலை விதைப்பு செய்வதை கைவிடாமல் இருந்தோம். தொடர் நஷ்டத்தால், இந்தாண்டு மாற்றுச்சாகுபடிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
அறுவடை சமயத்தில், விலை வீழ்ச்சியை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர் சத்துணவு திட்டத்தில், சுண்டல் வழங்க தேவையான கொண்டைக்கடலையை நேரடியாக விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்தால், விலை வீழ்ச்சி தவிர்க்கப்படும்; பெரும்பாலான விவசாயிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு, தெரிவித்தனர்.