/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகள் தினம்; பள்ளிகளில் உறுதியேற்பு
/
மாற்றுத்திறனாளிகள் தினம்; பள்ளிகளில் உறுதியேற்பு
ADDED : டிச 04, 2024 10:00 PM

- நிருபர் குழு -
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவியர் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா, வடக்கு வட்டார வளமையத்தில் கொண்டாடப்பட்டது. வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் ஸ்வப்னா, உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தினர்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு வட்டார கல்வி அலுவலர்கள் சர்மிளா, வெள்ளியங்கிரி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் 'ஒற்றுமையை வளர்ப்போம்' என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், இயன்முறை டாக்டர், பகல்நேர பாதுகாப்பு மைய ஆசிரியர், உதவியாளர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, வெங்கட்ரமணன் வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் செயல்படும் ஆதார வள மையத்தில் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் பூம்பாவை, குளோரிஸ்டெல்லா ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் காயத்ரி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 'ஒற்றுமைமை வளர்ப்போம்' என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை
வால்பாறையில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில், 43 பள்ளிகளை சேர்ந்த, 70 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. அரசு மேல்நிலைப்பள்ளிபள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைந்த பள்ளி குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம் வரவேற்றார். வால்பாறை தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், நகராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர், உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டி பேசினர். விழா ஏற்பாடுகளை, ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்புஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
உடுமலை
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பளளியில் 'பெனோ ஜெபைன்' என்ற மாற்றுத்திறனாளிகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
தலைமையாசிரியர் விஜயா தலைமை வகித்தார். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவியர் குறும்படத்தை பார்த்தனர். வாழ்வில் இலக்கை எட்டுவதற்கு மாற்றுத்திறன் தடையில்லை என, மாணவியருக்கு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி சிறார் திரைப்பட மன்ற பொறுப்பாசிரியர் ராஜேந்திரன் செய்திருந்தார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களும், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.