UPDATED : செப் 29, 2026 06:28 PM
ADDED : செப் 29, 2026 06:22 PM
சூலூர்: விண்ணப்பித்து ஒன்பது மாதம் ஆகியும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்காததால் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழக அரசு சார்பில், 75 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும், 2 ஆயிரம் ரூபாயும், குறைவான பாதிப்பு உள்ளவர்களுக்கு, 1,500 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
விபத்து மற்றும் இதர காரணங்களால் உடல் உறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளிகளான பலர், மாதாந்திர உதவி தொகை கேட்டு, விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், விண்ணப்பித்து ஒன்பது மாதங்கள் கடந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து உதவிதொகை கேட்டு விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், 'உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து 9 மாதங்கள் ஆகிவிட்டது. உரிய ஆவணங்களை இணைத்திருந்தும் இதுவரை உதவித் தொகை வரவில்லை. அரசு அலுவலகத்துக்கு சென்று விசாரிக்க முடியாத நிலையில் உள்ளோம். நிறைய பேருக்கு வரவில்லை. உடனடியாக உதவித்தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'பதிவு மூப்பு அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது,' என்றனர்.
