/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாயமாகும் பஸ்கள் :தவிக்கும் கிராம மக்கள்
/
மாயமாகும் பஸ்கள் :தவிக்கும் கிராம மக்கள்
ADDED : ஜன 19, 2024 11:29 PM
அன்னுார்:மாயமாகும் அரசு மற்றும் தனியார் பஸ்களால், கிராம மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
அன்னுாரில் இருந்து, கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கதவுகரை, பெரியபுத்தூர், காரமடை வழியாக தோலம்பாளையத்துக்கு இரண்டு தனியார் பஸ்கள் இயங்கி வந்தன.
இவை அன்னுாரில் இருந்து வடக்கே வடக்கலூர், கணுவக்கரை, வழியாக புளியம்பட்டி வரையிலும் இயங்கின. இதில் ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு தனியார் பஸ்களில் ஒரு பஸ் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த ஒன்றரை மாதமாக மற்றொரு தனியார் பஸ்சும் இயக்கத்தை நிறுத்தி விட்டது.
இதனால் அன்னுாருக்கு வடக்கே, வடக்கலூர், கனுவக்கரை, கரியா கவுண்டனுார், பச்சா கவுண்டனுார், எல்.கோவில் பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அன்னுார் செல்வதற்கும், புளியம்பட்டி செல்வதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அன்னுார் காரமடை வழித்தடத்தில் உள்ள கதவுகரை, கெம்பநாயக்கன்பாளையம், சாலையூர், மக்களும் இரண்டு தனியார் பஸ்கள் இயங்காததால் தவிக்கின்றனர். இதை தவிர அன்னுாரில் இருந்து காரமடைக்கு இரண்டு அரசு டவுன் பஸ்கள் இயங்குகின்றன.
இதில் ஒரு பஸ் மட்டுமே அனைத்து நேரத்திலும் இயங்குகிறது. மற்றொரு பஸ் அடிக்கடி மாயமாகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மொத்தமுள்ள நான்கு பஸ்களில் இரண்டு தனியார் பஸ்கள் இயங்குவதில்லை. இரண்டு அரசு டவுன் பஸ்களில் ஒரு பஸ் மட்டுமே முழுமையாக இயங்குகிறது.
ஒரு பஸ் பாதி நேரம் மட்டுமே இயங்குகிறது. இதுகுறித்து அன்னுார் அரசு போக்குவரத்து கழக கிளையிலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை காத்திருந்து பஸ்ஸில் செல்ல வேண்டி உள்ளது. அதிகாரிகள் உடனடியாக இந்த வழித்தடத்தில் முழுமையாக பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.