வேளாண் அலுவலகத்துக்கு கட்டடம் இன்றி... தவிப்பு! :உரம் , இடு பொருட்கள் வீணாகும் அபாயம்
வேளாண் அலுவலகத்துக்கு கட்டடம் இன்றி... தவிப்பு! :உரம் , இடு பொருட்கள் வீணாகும் அபாயம்
UPDATED : செப் 26, 2026 04:07 AM
ADDED : செப் 25, 2026 05:00 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறிய கட்டடத்தில் செயல்படுகிறது. உரம், மானிய இடு பொருட்களை வைக்க இடமில்லாத நிலையில், மழைநீர் புகும் சூழல் உள்ளதால், புதிய அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில், கடந்த, 1967ம் ஆண்டு வேளாண் விரிவாக்க மையம் துவங்கப்பட்டது. அங்கு, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வந்தன. தெற்கு வட்டாரத்துக்கு உட்பட்ட விவசாயிகள், மானிய திட்டங்கள், உரம் உள்ளிட்டவை பெற அலுவலகத்துக்கு வந்து சென்றனர்.
பராமரிப்பில்லாத கட்டடத்துக்கு மாற்றாக, புதிய கட்டடம் கட்டப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த, 2021ம் ஆண்டு தெற்கு ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்காக, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகம் காலி செய்யப்பட்டது. அந்த கட்டடங்களும் இடிக்கப்பட்டன.
அதன் பின், இரு அலுவலகங்களும், வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடு இல்லாத சிறிய கட்டடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன.
தெற்கு ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்ட பின், அங்கு வேளாண்துறைக்கு இடம் இல்லாததால், தற்காலிக கட்டடத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது:
மீன்கரை ரோட்டில் உழவர் மையம் அமைத்து, அங்கு வடக்கு வேளாண் துறை அலுவலகம், தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறை என அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதனால், விவசாயிகள் ஒரே இடத்தில் அதிகாரிகளை சந்தித்து சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுகின்றனர்.
அதே நேரத்தில், தெற்கு ஒன்றிய ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகத்துக்கு தனியாக கட்டட வசதி இல்லை; உரம், மானிய இடு பொருட்களை வைக்க வசதியில்லை. தற்காலிக கட்டடம் சிறிதாக இருப்பதுடன், மழைக்காலங்களில் மழைநீர் புகும் சூழல் உள்ளது. எனவே, அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடு இல்லாத கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு, வேளாண் அலுவலகம் கட்ட அரசு இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.
வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வேளாண்துறை அலுவலக கட்டடத்துக்கு இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. நகர பகுதியையொட்டியுள்ள விவசாயிகள் அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கு பஸ் வசதி வேண்டும். 20 சென்ட் இடம் இருந்தால் போதும் புதிய கட்டடம் கட்டலாம்.
இது குறித்து, பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே இடம் ஒதுக்கீடு செய்து தருவதற்கான முயற்சிகள் எடுப்பதாக சப்-கலெக்டர் தெரிவித்தார். விரைவில் தீர்வு காணப்படும்,' என்றார்.
வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில், வேளாண்துறைக்கு கட்டடம் கட்ட, 20 சென்ட் அளவீடு செய்யப்பட்டு, தாசில்தாருக்கு அறிக்கை வழங்கப்பட்டது. தாசில்தார் வாயிலாக, சப் - கலெக்டருக்கு வழங்கப்பட்டு, கலெக்டர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
