விமானப்படையினர் நடத்திய பேரிடர் கால தீயணைப்பு ஒத்திகை
விமானப்படையினர் நடத்திய பேரிடர் கால தீயணைப்பு ஒத்திகை
ADDED : பிப் 04, 2026 05:14 AM

சூலூர்: பேரிடர் கால தீ விபத்துகளை கட்டுப்படுத்தும் ஒத்திகையை, சூலூர் பெரிய குளத்தில் விமானப்படையினர் நிகழ்த்தினர்.
சூலூர் விமானப்படைத் தளத்தில் போர் விமானங்கள், மீட்பு பணியில் ஈடுபடும் ஹெலிகாப்டர்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நிலச்சரிவு, தீ விபத்துகள், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களில் சூலூர் விமானப்படை வீரர்கள் மீட்பு பணிகளுக்கு செல்வது வழக்கம்.
தீ விபத்துகள் ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்தும் ஒத்திகையில் அடிக்கடி விமானப்படையினர் ஈடுபடுவது வழக்கம். அதையொட்டி, சூலூர் பெரிய குளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த வீரர்கள், தாழ்வாக பறந்து, பெரிய கலன்களில் தண்ணீரை சேகரித்து விமானப்படைத்தளத்துக்கு எடுத்து சென்று, அங்குள்ள தொட்டியில் நிரப்பும் ஒத்திகையை மேற்கொண்டனர்.
பலமுறை இதுபோன்ற ஒத்திகையை செய்தனர். ஏராளமான பொதுமக்கள் திரண்டு பார்த்தனர். போலீசார், விமானப்படையினர் பாதுகாப்பளித்தனர்.
