/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரிடர் மீட்புக்குழுவினர் விழிப்புணர்வு; ஆற்றில் குளிக்க வேண்டாமென அறிவுரை
/
பேரிடர் மீட்புக்குழுவினர் விழிப்புணர்வு; ஆற்றில் குளிக்க வேண்டாமென அறிவுரை
பேரிடர் மீட்புக்குழுவினர் விழிப்புணர்வு; ஆற்றில் குளிக்க வேண்டாமென அறிவுரை
பேரிடர் மீட்புக்குழுவினர் விழிப்புணர்வு; ஆற்றில் குளிக்க வேண்டாமென அறிவுரை
ADDED : ஜூலை 16, 2025 08:47 PM

வால்பாறை; வால்பாறையில், சுற்றுலா பயணியரிடையே தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யும் நிலையில், பி.ஏ.பி., அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லார், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, பிர்லா நீர்வீழ்ச்சி, சோலையாறு அணைப்பகுதியை ஒட்டியுள்ள சேடல்டேம் உள்ளிட்ட பகுதிகளில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளதோடு, அந்தப்பகுதியில் நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணியர், சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் அதிகளவில் குளிக்க செல்கின்றனர். தொடர் மழையால் இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனிடையே, ஆற்றில் குளிக்க வந்த சுற்றுலா பயணியர்களிடம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'வால்பாறையில் மழை பாதிப்புக்களை தடுக்க, ஒரு மாதத்திற்கு மேலாக முகாமிட்டுள்ளோம். ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதாலும், நீர்சூழல் நிறைந்த பகுதியாக உள்ளதாலும், கூழாங்கல் ஆற்றில் யாரும் குளிக்க அனுமதியில்லை.
தொடர்ந்து, மழை காலத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக அழைத்து வருவது, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் சுற்றுலா பயணியரிடையே தெரிவிக்கப்பட்டது,' என்றனர்.