/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுவை மொட்டுகளில் விரவி நிற்கும் வரலாறு
/
சுவை மொட்டுகளில் விரவி நிற்கும் வரலாறு
ADDED : ஆக 31, 2025 05:56 AM

நீ ங்கள் நூடுல்ஸ் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆமெனில், உங்களுக்கு ஹக்கா உணவு பரிச்சயம் நிச்சயம் இருக்கும். ஆனால், நூடுல்ஸ் மட்டுமே ஹக்கா அல்ல.
காதரைன் லிம் தெற்காசியாவின் சிறந்த ஹக்கா சமையல் நிபுணர்களுள் ஒருவர். ஆசியாவின் சிறந்த ரெஸ்டாரன்ட்களுள் ஒன்றான, மும்பையின் மாஸ்க் லேப்ஸ் உட்பட டில்லி, புனே, பெங்களூரு, மலேசியாவில் உள்ள பிரபலமான ரெஸ்டாரன்ட்களுடன் இணைந்து செயல்படுபவர்.
சமீபத்தில் கோவை வந்திருந்த அவருடன் பேசினோம்.
''ஹக்கா என்பது உணவல்ல. ஓர் இனக்குழுவின் பெயர். ஹான் இனத்தின் கிளைக்குழுவினர். சீனாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பில், தங்களுக்கென சொந்த நிலமின்றி, நாடோடிகளாக வாழ்ந்த இனம்; விருந்தின மக்கள் என்ற பொருளும் உண்டு. பல்வேறு தரப்பினராலும் விரட்டப்பட்டு, தற்போது உலகம் முழுதும் பரவி வாழ்கின்றனர்,'' என்று ஹக்காவுக்கு ஒரு குட்டி அறிமுகம் தந்தார்.
நாம் ஆர்வமானதும் தொடர்ந்தார்....
''சீன உணவு வகைகளில் ஹக்கா பிரபலமானது. உப்பும், நறுமணமும் தனி அடையாளம். உமாமி என்ற ஜப்பானிய சொல், இதன் சுவையைக் குறிப்பிடுவதற்கான சரியான சொல்.
நாடோடிகள் என்பதால் குறிப்பிட்ட நிலப்பரப்பின் உணவல்ல ஹக்கா. எங்கெங்கு செல்கிறார்களோ அங்கு, அந்த வாழிடம், சூழலுக்கேற்ப, கிடைக்கும் பொருட்களை வைத்து சமைக்கும் எளிய, சுவையான உணவு. நாடோடிகளின் கடின உழைப்புக்கு ஏற்ப, உணவுகள் அதிக புரதம், கலோரி நிறைந்தது,''
நீங்கள் எப்படி ஹக்கா கற்றுக்கொண்டீர்கள்?
எனது தாத்தா லிம் கோக் கின் 1940களில், 13 வயதில் ஒரு கப்பலில் திக்கு தெரியாமல் கோல்கட்டா வந்திறங்கினார். ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் உதவியாளராக சேர்ந்து, லாகூரில் பணிபுரிந்தார். பிரிவினைக்குப் பின் அமிர்தசரஸ் வந்தவர், தானே ஷூ தயாரித்தார்.
எனது தாத்தாவும், பாட்டியும் மிகச்சிறந்த சமையல் நிபுணர்கள். பாட்டி, ஓட்டல் ஒன்றில் சமையல் கலைஞராக பணியாற்றினார்.
நான் மூன்றாவது தலைமுறை ஹக்கா இந்தியன். ஹக்கா உணவுகளை தாத்தா, அம்மாவைப் பார்த்து கற்றுக் கொண்டேன்.
ஹக்கா எப்படி தயாரிப்பது?
ஹக்கா உணவுக்கென்று எழுதப்பட்ட சமையல் குறிப்புகள் கிடையாது. எல்லாமே செவி வழியாகவும், அனுபவப்பூர்வமாகவும் கற்றுக் கொண்டதுதான்.
1990களில் எங்கள் குடும்பம் கோல்கட்டாவுக்கு இடம்பெயர்ந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஹக்கா உணவு வேண்டும் என அக்கம்பக்கத்தவர்கள் கேட்க, வீட்டிலிருந்து சமைத்துக் கொடுத்தேன். அதிலிருந்து எனது சமையல் பயணம் துவங்கியது.
கோல்கட்டாவில் ஹக்காக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எங்களின் பாரம்பரியத்தை, வரலாற்றை மறக்காமல் வைத்திருக்க உதவும் ஒரே பிணைப்பு உணவு. எனவேதான், இதை அடுத்த தலைமுறைக்கு கடத்த, ஹக்காவின் அசலான உணவுகளை சமைத்து வருகிறேன். இது என் இனத்துக்கான மரியாதை.
ஹக்கா உணவின் ஒவ்வொன்றுக்கும் ஒரு கலாசார பிணைப்பு இருக்கும். உதாரணமாக, 'யாம் அபாகஸ்' என்பது, சேனை மற்றும் மரவள்ளி மாவில் அபாகஸ் மணிகள் போல உருவாக்கப்படுவது. சீன புத்தாண்டில் செல்வத்தின் குறியீடாக பரிமாறப்படும்.அபாகஸ் எண்ணியல் கருவி. அதைப்போல காசையும் எண்ணலாமல்லவா.
நீங்கள் சொல்வதை கேட்டால், ஹக்காவுக்கு வரலாற்று தொடர்பும் உண்டோ?
நீங்கள் சொல்வது சரிதான். ஹக்கா ஆண்கள் சம்பாதிக்க வெகுதூரம் செல்வர்; அவர்கள் வீடு திரும்பும் நாள் நெருங்குகிறது என்று நினைவுபடுத்தவும், இந்த உணவு சமைக்கப்படுகிறது.
எப்போதும் புதிய உணவுகள் கிடைக்காது என்பதற்காக, உணவைப் பதப்படுத்த உப்பிடுவோம்; உலர்த்தப்பட்ட உணவுகள் எப்போதும் கைவசம் இருக்கும். இப்படி, பாரம்பரியமாக தொடர்வதுதான் ஹக்கா உணவுகள்.உணவு வயிறோடு மட்டுமல்ல, வரலாற்றோடும் தொடர்புடையது.
அடுத்த முறை நீங்கள் அசலான ஹக்கா உணவு ஒன்றை உண்ணும்போது, ஹக்கா என்ற மிக நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க, நாடோடி இனக்குழுவைப் பற்றியும், அந்த உணவுக்குப் பின்னால் இருக்கும் கதையையும், நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த உணவின் சுவை உங்கள் வாழ்நாள் முழுக்க நினைவில் நிற்கும்!