ADDED : ஜூன் 13, 2025 09:46 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், சரக்கு வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுவது; கடைகளுக்கு வருவோர் ரோட்டோரங்களை 'பார்க்கிங்' பகுதியாக மாற்றி வருவதால் போக்குவரத்துநெரிசல் தொடர்கதையாக உள்ளது.
பொள்ளாச்சி நகரப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, தற்போது தீராத தலைவலியாக போக்குவரத்து நெரிசல் பிரச்னை உள்ளது.
நியூஸ்கீம் ரோடு, கடை வீதி, ராஜாமில்ரோடு, சத்திரம் வீதி, மார்க்கெட் ரோடு போன்ற பகுதிகளில் வணிக வளாகங்களுக்கு செல்பவர்கள் வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' வசதியில்லாததால், ரோட்டிலேயே நிறுத்தி செல்கின்றனர். இதுமட்டுமின்றி, கடைகளுக்கு சரக்கு இறக்க வரும் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் நெரிசலால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சரக்கு வாகனங்கள், போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் நகருக்குள் வராமல் இருக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளளன. ஆனால், சரக்கு வாகன ஓட்டுநர்கள் இதை பின்பற்றுவதில்லை. மேலும், கடைகளுக்கு சரக்கு இறக்கும் வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன. சரக்கு இறக்கி முடித்து, அந்த வாகனங்கள் செல்லும் வரை, மற்ற வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடிவதில்லை.
வணிகநிறுவனங்களுக்கு வருவோர் ரோட்டோரங்களில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் நெரிசல் அதிகரிக்கிறது. போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.