தாசில்தார் அலுவலக கேட் பூட்டப்பட்டதால் அதிருப்தி
தாசில்தார் அலுவலக கேட் பூட்டப்பட்டதால் அதிருப்தி
ADDED : ஏப் 10, 2026 06:29 PM

வால்பாறை: வால்பாறை தாசில்தார் அலுவலக கேட் திடீரென்று பூட்டப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
வால்பாறை சட்டசபை தொகுதி தேர்தல் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்நிலையில் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் பணியில் அதிகாரிகள் அதிக அளவில் ஈடுபடபட்டதால், வால்பாறை தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது. இந்நிலையில், வால்பாறை தாசில்தார் அலுவலகத்திற்கு செல்லும் மெயின் கேட் நேற்று பூட்டபட்டது. இதனால், அலுவலகத்துக்குள் வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை தாலுகா அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கவும், ஆதார், இ-சேவை மையம் உள்ளிட்ட பணிகளுக்காக மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், நேற்று கேட் பூட்டப்பட்டதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் கூட உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது,' என்றனர்.
இது குறித்து, வால்பாறை தாசில்தார் அருள்முருகனிடம் கேட்டபோது, ''காலை, 10:00 மணிக்கு அலுவலக கேட் திறப்பது வழக்கம். அலுவலகத்தில் ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். பெரும்பாலான ஊழியர்கள் தேர்தல் பணியில் உள்ளனர். கேட் மூட்டியது குறித்து எனக்கு தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கிறேன்,'' என்றார்.
