/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 சதவீத மானியத்தில் காய்கறி விதை வினியோகம்
/
100 சதவீத மானியத்தில் காய்கறி விதை வினியோகம்
ADDED : ஜூலை 13, 2025 08:48 PM
கோவில்பாளையம்; வீட்டுத் தோட்டம் அமைக்க, தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில், தோட்டக்கலை, மலை பயிர்கள் துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 100 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் மதுபாலா பேசுகையில், ''ஒவ்வொரு தனி நபருக்கும் தினமும், 400 கிராம் காய்கறி, பழங்கள் தேவைப்படுகின்றன. ஊட்டச்சத்து உள்ள நஞ்சற்ற காய்கறிகள் மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும், மக்களின் அன்றாட காய்கறி தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத்தோட்டங்களில் காய்கறி வளர்ப்பதையும் அரசு ஊக்குவிக்கிறது.
''இதற்காக, 60 ரூபாய் மதிப்புள்ள தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை விதைகள் அடங்கிய தொகுப்பு மற்றும் 100 ரூபாய் மதிப்புள்ள எலுமிச்சை, பப்பாளி மற்றும் கொய்யா செடிகள் அடங்கிய தொகுப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வீட்டுத் தோட்டம் அமைக்க வழிகாட்டப்படும்,'' என்றார்.
'பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தோட்டக்கலைத் துறை இணையதளத்தில், ஆதார் எண்ணுடன் பதிவு செய்யலாம். சர்க்கார் சாமக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலும் பதிவு செய்யலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.