/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிமவளங்கள் களவு போவதை தடுக்க இனி அனைத்தும் ஆன்லைன்! அறிவிப்பு வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்
/
கனிமவளங்கள் களவு போவதை தடுக்க இனி அனைத்தும் ஆன்லைன்! அறிவிப்பு வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்
கனிமவளங்கள் களவு போவதை தடுக்க இனி அனைத்தும் ஆன்லைன்! அறிவிப்பு வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்
கனிமவளங்கள் களவு போவதை தடுக்க இனி அனைத்தும் ஆன்லைன்! அறிவிப்பு வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்
ADDED : ஏப் 08, 2025 05:30 AM

கோவை; கோவையில் கனிமவளங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில், எடுப்பதற்கும் கொள்ளை போகாமல் தடுப்பதற்கும் ஆன்லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அருகே, கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளை போயின. இது குறித்து, தன்னார்வலர்கள் மற்றும் இயற்கையை நேசிப்பவர்கள் வாயிலாக, கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கனிமவளக் கொள்ளைகளும் தடுத்து நிறுத்தப்பட்டன.
இச்சூழலில், கோவை மாவட்டத்தில் சிறு கனிம வளங்களான கற்கள், கிரானைட், கிராவல் மண் உள்ளிட்டவற்றை, குத்தகை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே எடுத்துச்செல்ல முடியும். குத்தகை தாரர்கள் அல்லாதவர்கள், கனிமவளங்களை எடுத்துச்செல்ல முடியாது.
குத்தகை எடுக்க விரும்புபவர்கள், இணைய வழியில் விண்ணப்பித்து, கனிமவளத்துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றவர்கள், அதற்கான அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே, கனிமவளங்களை எடுத்துச்செல்ல முடியும்.
கோவை மாவட்ட அளவில், தற்போது வரை கனிமவளங்கள் மற்றும் சிறு கனிமவளங்களை, குவாரி குத்தகை உரிமம் கோரி, நேரடியாக மற்றும் தபால் வாயிலாக விண்ணப்பங்கள் பெற்று, கனிமவளத்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இனி இணையம் மூலம்
இந்நிலையில், நேற்று முதல் கோவை மாவட்டத்தில், கனிமவளங்களை குத்தகை உரிமம் எடுக்க விரும்புபவர்கள், https://mimas/tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்கிறார், கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை(கனிமவளத்துறை) துணை இயக்குனர் பன்னீர் செல்வம்.
அவர் கூறியதாவது: தமிழகம் முழுக்க பழைய நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் கனிமவள குத்தகை அனைத்தும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி மேல், இந்நடைமுறையே தொடரும். இது, நிர்வாகரீதியாக எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
கலெக்டர் கூறுகையில், ''கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, கனிமவளங்கள் கொள்ளை போவதை முற்றிலும் தடுக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை வேண்டும். அதற்காகவே இந்த நடைமுறை. கனிமவளங்கள் இருக்கும் பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ட்ரோன் வாயிலாக அளக்கப்படும்,'' என்றார்.

