/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கிரிக்கெட் அணிகள் தேர்வு
/
மாவட்ட கிரிக்கெட் அணிகள் தேர்வு
ADDED : ஜன 20, 2025 06:47 AM
கோவை: கோவை மாவட்டத்தில் நடக்கும் ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டிக்கு, இரு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவில் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடத்தப்பட்டு, இரு அணிகள் லீக் போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டு, 'சி.ஆர்.ஐ., கோப்பைக்கான' லீக் நுழைவு போட்டிகள் நடந்தன.
கோவையில் எட்டு மைதானங்களில் நடந்த இப்போட்டியில், 98 அணிகள் விளையாடின. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், ஆறாவது டிவிஷனுக்கு தேர்வு செய்யப்படும்.
அந்த வகையில், பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்வி நிறுவன மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், ஏ.எஸ்.பி., என்டர்பிரைசஸ் கிரிக்கெட் கிளப் அணியும், எம்.எம்., கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஏ.எஸ்.பி., என்டர்பிரைசஸ் அணி, 49.4 ஓவரில், 235 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த எம்.எம்., கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுக்கு, 212 ரன்கள் எடுத்தனர்.
இவ்விரு அணிகளும் ஆறாவது டிவிஷன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.