/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி பின்னலாடை விற்பனை; திருப்பூருக்கு கைகொடுத்த தமிழகம்
/
தீபாவளி பின்னலாடை விற்பனை; திருப்பூருக்கு கைகொடுத்த தமிழகம்
தீபாவளி பின்னலாடை விற்பனை; திருப்பூருக்கு கைகொடுத்த தமிழகம்
தீபாவளி பின்னலாடை விற்பனை; திருப்பூருக்கு கைகொடுத்த தமிழகம்
ADDED : அக் 28, 2024 06:17 AM

திருப்பூர் : இந்தாண்டு தீபாவளி விற்பனையில், வடமாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் தான் திருப்பூருக்கு அதிகம் கைகொடுத்ததாக, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
ஏற்றுமதியில் மட்டுமின்றி, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியிலும், திருப்பூர் கோலோச்சுகிறது. கோடைக்காலத்தில் அணிய ஏற்றவையாக, திருப்பூர் ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அனைத்து மாநிலங்களிலும், இங்கு உற்பத்தியாகும் உள்ளாடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் விற்பனையாகின்றன.
சமீப காலமாக, சூரத், லுாதியானா போன்ற வடமாநில தொழில் நகரங்கள், பாலியஸ்டர் பின்னலாடை துணி உற்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளன. திருப்பூரில், பாலியஸ்டர் பின்னலாடை உற்பத்தி துவங்கியிருந்தாலும், வடமாநிலங்களே அதற்கான துணியை வழங்குகின்றன.
பாலியஸ்டர் துணியை தமிழகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து ஏன் ஆடைகளை வாங்க வேண்டும் என்று யோசித்த வட மாநில உற்பத்தியாளர்கள், தாங்களே ஆடை உற்பத்தியை துவக்கி வருகின்றனர். ஆடைகளின் தரத்தில் திருப்பூருடன் போட்டியிட முடியாவிட்டாலும், விலையில் கடும் போட்டியாக மாறிவருகின்றனர்.
இதனால், திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், வடமாநில சந்தைகளில் கடும் போட்டியை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கால ஆர்டர் தான், திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கிறது.
இந்தாண்டு தீபாவளி ஆர்டர்களில், வடமாநிலங்களின் பங்களிப்பு குறைந்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் கிடைத்ததால், தீபாவளி வர்த்தகம் சமன் செய்யப்பட்டுள்ளதாக, உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
திருப்பூரில் தயாராகும் பருத்தி நுாலிழை பின்னலாடைகளை வடமாநில மக்களும் விரும்புகின்றனர். இருப்பினும், பாலியஸ்டர் பின்னலாடைகளுடன் ஒப்பிடுகையில், விலை அதிகம் என்பதால், பருத்தி நுாலிழை ஆடைகள் விற்பனை மந்தமாகியுள்ளது. திருப்பூரை சேர்ந்த உற்பத்தியாளர்களே, சோதனை முறையில் பாலியஸ்டர் ஆடைகளை தைத்து, மும்பை மார்க்கெட்டில் கடை விரிக்க துவங்கியுள்ளனர். வடமாநிலங்களில் இருந்து வழக்கமாக வரும் தீபாவளி ஆர்டர், இந்தாண்டு வந்தது.
இருப்பினும், பாலியஸ்டர் ஆடைகள் ஆக்கிரமித்து வருவதால், சில மாநில ஆர்டர்கள் குறைந்துவிட்டன.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான உள்ளாடைகள், இரவு நேர ஆடைகள், பின்னலாடைகள், 'பார்ட்டி' ஆடைகளுக்கு, ஆர்டர் அதிகம் கிடைத்தது.
கையிருப்பு இல்லாததால், கூடுதலாக ஆர்டர் கொடுத்து, வியாபாரிகள் பெற்று, தீபாவளி விற்பனையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.