ADDED : அக் 28, 2024 11:58 PM

கோவை : கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் செம்மொழித் தமிழ் மன்றம் சார்பில், 'நிலம் நீர் நிழல்' என்ற தலைப்பில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற தீபாவளி சிறப்பு கவியரங்கம், மாவட்ட நுாலக அரங்கில் நேற்று நடந்தது.
கோவை அரசு கலைக்கல்லுாரி தமிழ் முதுகலை மாணவர் சரவணகுமார் தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழலை மையமாக வைத்து நிலம்,நீர், நிழல் என்ற கருப்பொருளில் எட்டு மாணவர்கள் கவிதை வாசித்தனர்.
நிகழ்ச்சியின் நெறியாளர் கவிஞர் ரவீந்திரன் பேசியதாவது:
அடுத்த தலைமுறை படைப்பாளர்களாக வர இருப்பவர்கள் மாணவர்கள்.எதிகால தமிழ் இலக்கியம் அவர்கள் கையில்தான் உள்ளது. படைப்பாளர்களுக்கு வாசிப்புதான் வளம் சேர்க்கும். மாணவர்கள் தொடர்ந்து கவிதைகள் எழுதி நுாலாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரன், செம்மொழி தமிழ் மன்ற தலைவர் கீதா தயாளன் கவிஞர்கள் கோவை கிருஷ்ணா, செந்தாமரை உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.