ADDED : ஏப் 16, 2026 09:09 PM
அன்னூர்: தி.மு.க., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
தி.மு.க., முன்னாள் அன்னூர் ஒன்றிய செயலாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன். 2016ல் அவிநாசி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவர் தனக்காகவும், தனது மகன் சங்கீத் ஆனந்தனுக்காகவும், அவிநாசி மற்றும் வால்பாறை, தனி தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். எனினும் வாய்ப்பு தரப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ஆனந்தன், தனது ஆதரவாளர்களுடன் கோவையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
இதையடுத்து ஆனந்தன் நிருபர்களிடம் பேசுகையில், தி.மு.க., கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களாக தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை புறக்கணிக்கிறது. கட்சி கார்ப்பரேட் கம்பெனி போல் நடைபெறுகிறது. கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மதிப்பில்லை, என்றார்.
மாஜி மாவட்ட கவுன்சிலர் ஆனந்தனுடன், அன்னூர் மற்றும் கோவையைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
