/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசு!
/
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசு!
ADDED : ஜன 28, 2025 06:21 AM
பொள்ளாச்சி : 'தி.மு.க., ஆட்சியில், எந்தவொரு புதிய திட்டமும் கொண்டு வரவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை,' என, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில், கோவை தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, தலைமை வகித்து பேசியதாவது:
இலங்கைத் தமிழர்களுக்காக, உண்மையான ஈடுபாட்டுடன் உதவி செய்தது, எம்.ஜி.ஆர்., மட்டுமே. தி.மு.க., மிகவும் மோசமான ஆட்சியை நடத்தி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பாலியல் தொடர்பான பிரச்னைக்கு 'யார் அந்த சார்?' என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
தி.மு.க., ஆட்சியில், எந்தவொரு புதிய திட்டமும் கொண்டு வரவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டமும் முழுமையாக சென்றடையவில்லை.
லோக்சபா தேர்தலில், மோடியா அல்லது ராகுல்காந்தியா என, ஓட்டு போடுவர். ஆனால், சட்டசபை தேர்தல் வந்துவிட்டால், அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே மக்கள் ஓட்டளிப்பர். ஏனென்றால், தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களைத் தான், ஸ்டாலின் திறந்து வைத்து கொண்டிருக்கிறார். கோவை மாவட்டத்தை பொறுத்தமட்டில், 50 ஆண்டு கால வளர்ச்சிக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

