/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி தண்ணீர் சப்ளை குறைப்பு :மா.கம்யூ.,வை சிக்க வைக்கும் தி.மு.க.,
/
சிறுவாணி தண்ணீர் சப்ளை குறைப்பு :மா.கம்யூ.,வை சிக்க வைக்கும் தி.மு.க.,
சிறுவாணி தண்ணீர் சப்ளை குறைப்பு :மா.கம்யூ.,வை சிக்க வைக்கும் தி.மு.க.,
சிறுவாணி தண்ணீர் சப்ளை குறைப்பு :மா.கம்யூ.,வை சிக்க வைக்கும் தி.மு.க.,
ADDED : பிப் 16, 2024 02:04 AM
கோவை;இரு மாநில ஒப்பந்தப்படி, சிறுவாணி அணையில் தண்ணீர் வினியோகிக்கும் விவகாரத்தில், மா.கம்யூ.,வை சிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது, தி.மு.க.,
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் சிறுவாணி அணை அமைந்திருக்கிறது. அம்மாநில நீர்ப்பாசனத்துறை பராமரிக்கிறது. அதற்கான கட்டணம் கோவை மாநகராட்சி நிர்வாகத்தால், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
அணையின் மொத்த உயரம் - 50 அடி; தற்போதைய சூழலில், 24 அடிக்கு இருப்பு இருக்கிறது. தமிழகம் - கேரளம் இடையே செய்துள்ள ஒப்பந்தத்தின் படி, குடிநீர் பயன்பாட்டுக்காக, நாளொன்றுக்கு, 10.1 கோடி லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும்.
போதுமான அளவு இருப்பு இருந்த போதிலும், 3.4 கோடி லிட்டர் தண்ணீரையே கேரள அரசு வழங்குகிறது. நாளொன்றுக்கு, 6.4 கோடி லிட்டர் தண்ணீர் சப்ளையை குறைத்த காரணத்தால், 10-15 நாட்களுக்கு ஒருமுறையை மக்களுக்கு குடிநீர் வழங்க முடிகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில், குடிநீர் பிரச்னையை செயற்கையாக உருவாக்கி இருப்பதால், தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு விசாரித்தபோது, 'திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயத்துக்கு கேரளாவுக்கு தர வேண்டிய தண்ணீரை வழங்காததால், சிறுவாணியில் இருந்து நமக்கு வழங்க வேண்டிய அளவை குறைத்திருக்கின்றனர்' என, தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வு காண, இரு மாநில அரசு செயலர்கள் மட்டத்தில் பேச்சு நடத்த வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இப்பிரச்னை, சட்டசபை கூட்டத்தொடரில் எழுந்தபோது, கேரள அரசுடன் பேசுமாறு, மா.கம்யூ., கட்சியை சேர்ந்த கோவை எம்.பி.,யுடன் கூறியிருப்பதாக, அமைச்சர் நேரு பதிலளித்தார்.
கேரளாவில் கம்யூ., ஆட்சியே நடக்கிறது. வரும் லோக்சபா தொகுதியில் கோவையில் மீண்டும் மா.கம்யூ., போட்டியிட நினைக்கிறது. கோவையில், குடிநீர் வினியோகம் 10-15 நாட்களுக்கு ஒருமுறையே வருவதற்கு காரணம் கேரள அரசு சிறுவாணியில் இருந்து வழங்கும் அளவை குறைத்ததே என்கிற குற்றச்சாட்டை, தி.மு.க., பகிரங்கமாக சுமத்தியுள்ளது.
அமைச்சர் உதயநிதி தலைமையில், பில்லுார்-2 திட்ட துவக்க விழாவின் போது, 'சிறுவாணியில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும், சப்ளையை குறைத்திருப்பது கேரள அரசு' என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி, பகிரங்கமாகவே, மேடையில் அறிவித்தார்.
அதனால், சிறுவாணி குடிநீர் பிரச்னையை தீர்க்கும் பொறுப்பை, மா.கம்யூ.,விடம் தி.மு.க., தள்ளி விட்டுள்ளது. மீண்டும் கோவையில் மா.கம்யூ., போட்டியிட வேண்டுமெனில், குடிநீர் பிரச்னைக்கு அக்கட்சி தீர்வு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இரு மாநில ஒப்பந்தப்படி, சிறுவாணியில் இருந்து கொடுக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டிய கடமை மா.கம்யூ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை எம்.பி., (மா.கம்யூ.,) நடராஜனிடம் கேட்டதற்கு, ''சிறுவாணி அணையில் குடிநீர் எடுப்பது தொடர்பாக, கேரள முதல்வரின் கவனத்துக்கு தமிழக அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். அதை கவனிக்க வேண்டுமென்கிற கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறோம். கேரள அரசுடன் பேசுவதற்கு மா.கம்யூ., முயற்சி மேற்கொள்ளும்,'' என்றார்.