/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கக் கூடாது! மாநகராட்சிக்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவு
/
அரசு உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கக் கூடாது! மாநகராட்சிக்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவு
அரசு உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கக் கூடாது! மாநகராட்சிக்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவு
அரசு உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கக் கூடாது! மாநகராட்சிக்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவு
ADDED : நவ 09, 2024 11:26 PM
கோவை: 'கட்டட வரைபட அனுமதி வழங்குவதற்கு, தமிழக அரசின் உத்தரவுகளை மீறி, மாநகராட்சிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட வரைபட அனுமதி பெறுவதென்றால் குதிரைக்கொம்பாக இருக்கிறது. அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காண, சுய சான்றளிப்பு திட்டத்தில், 2,500 சதுரடி வரை பரப்பளவுள்ள மனையில், 3,500 சதுரடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் கட்டுவதற்கு இணைய வழியில் கட்டட வரைபட அனுமதி அளிக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.
கோவை மாநகராட்சிக்கு சதுரடிக்கு, 88 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு முன், 44 ரூபாயாக இருந்தது. இரட்டிப்பு கட்டணம் நிர்ணயித்ததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அரசின் கவனத்துக்கு சென்றதும், சில திருத்தங்கள் செய்து, ஒருங்கிணைந்த கட்டணம் நிர்ணயித்து, புதிய அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், சதுரடிக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்குள் ஆய்வு கட்டணம், கட்டட அனுமதி கட்டணம், அனுமதி காட்சி பலகை கட்டணம், தொழிலாளர் நல நிதி கட்டணம், உள்கட்டமைப்பு கட்டணம், கட்டட இடிபாடு அகற்றுதல் கட்டணம், உள்ளூர் திட்ட குழும கட்டணம், கட்டட அனுமதி வைப்புத்தொகை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டது என கூறப்பட்டது.
மேலும், 3,500 சதுரடி பரப்பளவு கொண்ட இரண்டு குடியிருப்புகளுக்கு மிகாமல், தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் ஒரு தளம் கொண்ட, ஏழு மீட்டர் உயரத்துக்கு உட்பட்ட கட்டுமானம் என வரையறுத்துள்ளது. ஆனால், 3,500 சதுரடிக்கு மேலான கட்டடங்களுக்கும் சதுரடிக்கு, 88 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்க நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியது.
தமிழக அரசின் உத்தரவை கிடப்பில் போட்டு விட்டு, இயக்குனரகத்தின் சுற்றறிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்துகின்றன. இதைத்தொடர்ந்து, செப்., மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அத்தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், நகரமைப்பு பிரிவினர் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
இச்சூழலில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'மாநகராட்சி, நகராட்சிகளில் கட்டட அனுமதி வழங்கும்போது, அரசாணைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தொழிலாளர் நல வாரியம், பொதுப்பணித்துறை, மத்திய - மாநில திட்டங்களுக்காக வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகிய துறைகளால், கட்டட அனுமதி வழங்கும்போது, வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து வெளியிடப்படும் அரசாணைகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களில் அனுமதிக்கப்படும் உபவிதிகளின் படியான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்க வேண்டும். இவை தவிர்த்து வேறு ஏதேனும் கட்டணங்கள், சட்டப்படியான அனுமதியின்றி வசூலித்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்திருக்கிறார்.