/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சி திட்டத்துக்கு நீர்நிலைகளை அழிக்க கூடாது
/
வளர்ச்சி திட்டத்துக்கு நீர்நிலைகளை அழிக்க கூடாது
ADDED : அக் 06, 2024 08:19 AM

கோவை : ''வளர்ச்சி திட்டத்துக்கு நீர் நிலைகளை அழிக்க கூடாது,'' என்று ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் பேசினார்.
பீம்ராவ் இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை மையம் துவக்கவிழா, கோவையில் நேற்று நடந்தது. சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
திண்டுக்கல் அருகே கொத்தையம் என்ற இடத்தில், சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க அரசு முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து இரண்டு விவசாயிகள் வழக்கு தொடுத்தனர்.
குளம் இருந்த இடத்தில், தரிசு நிலம் என தவறான தகவலை அளித்து தொழிற்பேட்டை அமைக்க இருப்பதாக வழக்கில் தெரிவித்து இருந்தனர். அந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த போது, ஒரு கிலோ மீட்டர் துாரத்துக்கு குளக்கரை இருந்ததை பார்த்தேன். அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு அளித்தேன். வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் நீர் நிலைகளை அழித்து விட்டோம். இது போன்ற செயலை அனுமதிக்க கூடாது.விவசாயிகள் வழக்கு தொடுத்ததால் தான், இந்த விஷயம் வெளியே வந்தது. எனவே, அனைவருக்கும் சட்ட விழிப்புணர்வு கட்டாயம் தேவை. இதே போல, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்க, அரசு மருத்துவமனைக்கு அலைக்கழிக்க கூடாது. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வீட்டிற்கு நேரில் சென்று சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று மற்றொரு தீர்ப்பு அளித்து இருந்தேன். இந்த தீர்ப்பு குறித்து எத்தனை பேருக்கு தெரியும். எனவே மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி சுவாமி நாதன் பேசினார்.
நிகழ்ச்சிக்கு, வக்கீல் சுந்தர் தலைமை தாங்கினார். அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, சிறுவாணி ஆச்சர்யா சின்மயா கார்டன் சுவாமினி சம்பிரதிஷ்த்தானந்தா ஆகியோர் பேசினர்.