/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுரோட்டில் நின்றுதான் பஸ் ஏற வேண்டுமா?
/
நடுரோட்டில் நின்றுதான் பஸ் ஏற வேண்டுமா?
ADDED : ஆக 18, 2025 09:33 PM

கோவை; உக்கடம் மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், உக்கடம் பஸ் ஸ்டாண்டின் தரைத்தளத்தில் பணிகள் முடியாமல் உள்ளன. இதனால் பயணிகள் நின்று பஸ் ஏறவும், இறங்கவும் சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, செல்லும் பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படுகின்றன. உக்கடத்தில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்ததால், பஸ் ஸ்டாண்டில் உள் பகுதி இடிக்கப்பட்டு, மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், உக்கடம் பஸ் ஸ்டாண்டின் உள்பகுதியில், பணிகள் முடியாமல் உள்ளன.
இதனால் பயணிகள் நின்று பஸ் ஏறவும், இறங்கவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் உள்ளே பயணிகள் நின்று, பஸ் ஏறும் இடத்தை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், பயணிகள் நிற்க இடமில்லாமல், பஸ் வரும் வழித்தடத்தில் நிற்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வரும் பஸ்கள், போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் நிறுத்தப்படுகின்றன.
இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
செய்ய வேண்டியதென்ன? பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, பயணிகள் நிற்க வசதியாக நிழல்குடை அமைக்க வேண்டும்.
பஸ்டாண்டுக்கு வெளியே பஸ்கள் நிறுத்த ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை முறைப்படுத்தி, போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல், பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, பயணிகளும், வாகன ஓட்டிகளும், கோரிக்கை விடுத்துள்ளனர்.
'பணிகள் முழுமையாக
முடிந்தால்தான் தீர்வு'
அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் துரைசாமி கூறுகையில், ''உக்கடம் பஸ் ஸ்டாண்டில், தரைத்தளத்தில் உள்ள கட்டுமான பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. பணிகள் முழுமையாக முடிந்த பிறகுதான், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தற்காலிகமாக பஸ்களை ஓரமாக நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்,'' என்றார்.