/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்ணில் என்னென்ன சத்து இருக்கு தெரியுமா? 40 ரூபாயில் பரிசோதனை முடிவு
/
மண்ணில் என்னென்ன சத்து இருக்கு தெரியுமா? 40 ரூபாயில் பரிசோதனை முடிவு
மண்ணில் என்னென்ன சத்து இருக்கு தெரியுமா? 40 ரூபாயில் பரிசோதனை முடிவு
மண்ணில் என்னென்ன சத்து இருக்கு தெரியுமா? 40 ரூபாயில் பரிசோதனை முடிவு
ADDED : பிப் 22, 2024 10:44 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வாயிலாக, 40 ரூபாய்க்கு மண் பரிசோதனை செய்வதால், விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுாரில் இருந்து நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் வாகனம் பொள்ளாச்சி வந்தது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வேளாண்துறை சார்பில், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, பொள்ளாச்சி பூர்ணா புரொடியூசர் நிறுவன வளாகத்தில், மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், விவசாயிகள் ஆர்வமாக பங்கேற்று, மண் மற்றும் நீரினை கொண்டு வந்து குறைந்தபட்ச கட்டணமாக, 40 ரூபாய் செலுத்தி பரிசோதனை செய்து கொண்டனர்.
வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பயிர் அறுவடைக்கு பின் அல்லது அடுத்த பயிர் சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன், மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். உரமிட்ட பின்னரோ அல்லது உழவு செய்த பின்னரோ மண் மாதிரி எடுக்க கூடாது. பயிரிடப்படும் பயிரின் வேரின் ஆழத்துக்கு ஏற்ப, 'வி' வடிவத்தில் குழி வெட்ட வேண்டும். குழியின் சரிவில் இருந்து கீழாக இரு பக்கங்களிலும், ஒரே சீராக அரை அங்குல கணத்துக்கு மண்ணை செதுக்கி எடுக்க வேண்டும்.
ஒரு ஏக்கர் அல்லது ஒவ்வொரு மண் வகை அல்லது நில அமைப்பிற்கும் குறைந்தது, 10 இடங்களில் மண் சேகரிக்க வேண்டும். நெல், ராகி சோளம், கம்பு, நிலக்கடலை போன்ற குட்டை வேர்கள் உள்ள பயிர்களுக்கு, அரை அடி ஆழத்தில் (15 செ.மீ.,), பருத்தி, மிளகாய், கத்தரி, மஞ்சள், வாழை, மரவள்ளி, காய்கறிகள் போன்ற ஆழமான வேர்கள் உள்ள பயிர்களுக்கு முக்கால் அடி (22.5 செ.மீ.,) ஆழத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும்.
தென்னை, பழ மரங்கள் சாகுபடிக்கு, மூன்று அடி ஆழம் குழி தோண்டி முதல் அடியில் ஒரு மண் மாதிரி, இரண்டாவது அடியில் ஒரு மண் மாதிரி, மூன்றாவது அடியில் ஒரு மண் மாதிரி என, மூன்று மாதிரிகள் தனித்தனியே எடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், 40 மண் மாதிரிகள், 37 தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவை பரிசோதனை செய்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
அதில், அங்கக கரிமம் அல்லது தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, இரும்பு மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம் அளவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மண் சத்து குறைபாடு இருந்தால் அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.