/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முகம் பளபளன்னு ஆகணும்னு ஆசையா?
/
முகம் பளபளன்னு ஆகணும்னு ஆசையா?
ADDED : ஜூலை 20, 2025 01:42 AM

பளபளப்பான சருமம் வேண்டுமென்ற ஆசை யாருக்குதான் இல்லை. அதிலும் பெண்கள் பலர், சருமத்தை பராமரிக்க ஆயிரக்கணக்கில் செலவழிக்கின்றனர்.
'ஆர்வக்கோளாறால் பயன்படுத்தும் தவறான கிரீம்களே, சருமத்துக்கு பல பிரச்னைகளை அழைத்து வந்து விடுகிறது' என்கிறார், கோவை அரசு மருத்துவமனை தோல் நோய் மருத்துவ நிபுணர் ரேவதி.
சரும பராமரிப்பில் இளம் பெண்கள் செய்யக் கூடாதது என்ன?
கேள்விப்படும் கிரீம்களை எல்லாம், வாங்கி பயன்படுத்துவது தான் அந்த தவறு. குறிப்பாக, டாக்டரிடம் ஆலோசிக்காமல் புதிது புதிதாக முயற்சி செய்து பார்க்கின்றனர்.
இது ஆபத்தானது.
சரும பராமரிப்பின் அடிப்படைகள் என்ன?
முகம் பளபளக்க வேண்டும் என விரும்புவது, இயல்பான ஒன்றுதான். ஆனால், அடிப்படையை மறந்து விடுகின்றனர். முகத்தை அடிக்கடி கழுவினாலே போதுமானது. ஒரு நாள் முழுக்க வீட்டிலேயே இருந்தாலும், 2-3 முறை முகம் கழுவ வேண்டும். வெளியில் சென்று வரும் போது, முதலில் செய்ய வேண்டியதும் இதுவே. தேவையற்ற கிரீம் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு, ஜென்டிலான கிளன்சர் பயன்படுத்தலாம்.
சன்ஸ்கிரீன் கட்டாயம் என்று கூறப்படுகிறதே?
சன்ஸ்கீரீன், மாய்ஸ்ச்சுரைசர் சருமத்திற்கு நல்லது தான். காலை, மாலை என இரண்டு வேளையும் பயன்படுத்த வேண்டும். பல சருமம் சார்ந்த பிரச்னைகள் வராது. இந்த கிரீம்களையும் சருமத்திற்கு ஏற்ப, வாங்கி பயன்படுத்த வேண்டும்.
சருமத்திற்கு ஏற்ப என்றால் எப்படி?
சருமம் பொதுவாக, எண்ணெய் பசை கொண்டது, வறண்டது, நார்மல், சென்சிடிவ், கலவை என்ற பிரிவுகளில் இருக்கும். ஒரு சில கிரீம்கள், ஒரு சில சரும வகைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்திவிடும். இதனால், சருமத்தின் தன்மைக்கு ஏற்ற கிரீம்களை மட்டுமே பரிந்துரைப்போம்.
'இன்ஸ்டன்ட் க்ளோ ' கிரீம் எப்படி?
இன்ஸ்டன்ட் க்ளோ என்பது எங்கும் இல்லை. சரியான சரும பராமரிப்பு இருந்தால் பளபளப்பு தானாக வரும். உடனடியாக பளபளப்பு ஆகிறது என்றால், அந்த கிரீம் சருமத்தை பாதிக்கும் மூலப்பொருட்ளை கொண்டதாக இருக்கும். இதை தவிர்ப்பது நல்லது.
சமூகவலை தளங்களை திறந்தாலே, 'க்ளூட்டோத்தையான்', 'ரெட்டினால்' என்கின்றார்களே, பல கிரீம்களை பரிந்துரைக்கின்றனர், இதை பயன்படுத்தலாமா?
நிச்சயம் கூடாது. சமூகவலை தளங்களில் யார் யாரோ கிரீம்களை பரிந்துரைப்பதை பார்க்கின்றோம். ரெட்டினால் போன்ற கிரீம்கள், முதலில் குறைந்த அளவு பயன்படுத்தி படிப்படியாக அளவை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
க்ளூட்டோத்தையான் என்பது, முகம் வெள்ளையாக பயன்படுவதாக கூறுகின்றனர். இந்த மூலப்பொருட்களுடன், பிற பல மூலப்பொருட்கள் சேர்த்து கிரீம்கள் தயாரிக்கின்றனர். பொத்தாம்பொதுவாக பயன்படுத்தக்கூடாது.
இந்த முகப்பரு பெரிய பிரச்னையாக இருக்கிறதே...?
முகப்பரு வந்தால் கண்டுகொள்ளாமல் விட்டால், தானாக போய் விடும். அதில் பூண்டு வைப்பது, வெங்காயம் வைப்பது, நோண்டுவது, பிதுக்குவது என செய்தால் அது நிரந்தர தழும்பாக மாறி விடும். ஆன்லைன் பார்த்து, ஸ்டீராய்டு உள்ள கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சரும பராமரிப்புக்கு அப்புறம் என்னதான் செய்வது? வீடுகளில் உள்ள மஞ்சள், தயிர், உருளைக்கிழங்கு போன்றவற்றை பயன்படுத்தலாமா?
அடிக்கடி முகம் கழுவுவது, அதிக தண்ணீர் பருகுவது, பழங்கள், காய்கறி அதிகம் உணவில் எடுத்துக்கொள்வது, சர்க்கரை சார்ந்த உணவு பொருட்களை முடிந்த அளவு தவிர்ப்பது அவசியம். ஜென்டில் கிளன்சர், மாய்ஸ்ச்சுரைசர், சன்ஸ்கீரின் பயன்படுத்தினாலே போதும். சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தி விடுகிறது. முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது.