/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
/
100 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
ADDED : ஜூன் 29, 2025 11:37 PM

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்து தவித்த, நாயை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
கருமத்தம்பட்டி அடுத்த ஊஞ்சப் பாளையத்தை சேர்ந்தவர் பாலு. கணியூர் ஊராட்சி முன்னாள் தலைவர். இவரது குழந்தைகள் 'ஜெட்' எனும் நாயை வளர்த்து வந்தனர். கடந்த இரு நாட்களுக்கு முன், மற்ற நாய்கள் துரத்தியதால், ஜெட் காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனாலும் தேடுதல் முயற்சியை கைவிடவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்து கிணற்றில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது வளர்ப்பு நாய் ஜெட் கிணற்றுக்குள் தவிப்பது தெரிந்தது.
உடனடியாக கருமத்தம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அலுவலர் சிவக்குமார் மற்றும் வீரர்கள் அங்கு சென்றனர். கயிறு கட்டி கிணற்றில் இறங்கிய வீரர்கள் நாயை பத்திரமாக மீட்டனர்.
இரண்டு நாட்களாக தவித்த குழந்தைகள், ஜெட்டை கட்டிப்பிடித்து கொஞ்சினர். பிஸ்கட்டுகளை கொடுத்து மகிழ்ந்தனர். ஜெட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, அனைவரும் நன்றி தெரிவித்தனர்.