/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறைச்சியில் விஷம் வைத்து நாய்கள் கொலை
/
இறைச்சியில் விஷம் வைத்து நாய்கள் கொலை
ADDED : ஜூலை 18, 2025 09:55 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே, கோழி இறைச்சியில் விஷம் வைத்து, ஐந்து நாய்கள், இரண்டு பூனைகள், ஒரு காகம் கொல்லப்பட்டன.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், டேங்க் மேடு அருகே உக்கான் நகரில், குடியிருப்பவர்களில் பலர் நாய்கள், பூனைகளை வளர்க்கின்றனர். அந்த நாய்கள் இரவில் வருபவர்களை விரட்டியுள்ளன.
இந்நிலையில், நேற்று அந்த நாய்கள் மயங்கி கிடந்தன. நாயின் உரிமையாளர்கள், மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சிகிச்சை அளிப்பதற்கு முன்பே ஒரு நாய் இறந்துவிட்டது. மற்ற மூன்று நாய்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தன.
வீடுகளின் ஓரங்களில் நான்கு நாய்கள் இறந்து கிடந்தன. அதே போன்று இரண்டு பூனைகளும், ஒரு காகமும் இறந்து கிடந்ததை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுமக்கள் மேட்டுப்பாளையம் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் போலீசார், விசாரணை செய்தனர்.
இறந்த நாய்கள், பூனைகளை சிறுமுகை கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ததில், கோழி இறைச்சியில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.
சிக்கதாசம்பாளையம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

