இந்த இடத்தில் வேண்டும் சிறிய அணை டொமான் பாறை!விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை
இந்த இடத்தில் வேண்டும் சிறிய அணை டொமான் பாறை!விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை
UPDATED : ஜூலை 06, 2026 07:50 PM
ADDED : ஜூலை 06, 2026 07:23 PM
மேட்டுப்பாளையம்: கோடைகாலத்தில் பவானி ஆறு வற்றி, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை போக்க, பவானி ஆற்றின் குறுக்கே 'டொமான் பாறை' என்ற இடத்தில் சிறிய அணை கட்ட, விவசாயிகள் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பில்லுார் அணையின் நீர்மட்டம் 100 அடியில், சுமார், 60 அடி வரை வண்டல் மண் மற்றும் சேறு, சகதி படிந்துள்ளது. அணையின் நீர் மட்டும் 75 அடிக்கு மேல் இருந்தால், மின்சாரம் உற்பத்தி செய்ய, பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். நீர் குறையும் பட்சத்தில், மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்து விடுவதில்லை. அணையில் இருக்கின்ற நீர், கோவை மாநகராட்சியின் இரண்டு குடிநீர் திட்டங்களுக்கு இருப்பு வைக்கப்படுகிறது.
மேலும், அணையில் இருந்து வடிந்து வரும் நீர் மற்றும் நீரூற்றுக்கள் வாயிலாக, பவானி ஆற்றில் வரும் நீரை, கோவை, திருப்பூர் மாநகராட்சிகளின் குடிநீர் திட்டங்களுக்கு, வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே வெல்ஸ்புரத்தில் உள்ள கதவணையிலும், மேட்டுப்பாளையம் சாமண்ணா நீரேற்று நிலையம் அருகே, பவானி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணையிலும் இருப்பு வைக்கப்படுகிறது. இதனால், மேட்டுப்பாளையம் - சிறுமுகை இடையேயுள்ள ஆறு வறண்டு, 17 குடிநீர் திட்டங்களுக்கு, நீர் இல்லாத நிலை ஏற்படுகிறது.
இந்நிலையை போக்க, பவானி ஆற்றின் குறுக்கே சிறிய அளவில் அணை கட்டி, மழை காலத்தில் வரும் வெள்ள நீரை தேக்கினால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்கப்படும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பவானி நதிநீர் பாதுகாப்பு குழு தலைவர் அரங்கசாமி, பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் துரைசாமி, நடராஜன் ஆகியோர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு:
கோடையில், பவானி ஆறு வறண்டு போவதை தடுக்க, பில்லுார் அணைக்கும் நெல்லித்துறைக்கும் இடையே, 'டொமான் பாறை' என்னும் இடத்தில் சிறிய அணை கட்ட வேண்டும். மழை காலத்தில், பில்லுார் அணையில் இருந்து நிரம்பி வரும் வெள்ள நீரை, இந்த அணையில் தேக்கி வைக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசுக்கு, 2024ம் ஆண்டு கோரிக்கை மனுக்கள் அனுப்பினோம். கடந்த ஜூன் மாதம், சேலம் நீர்வளத்துறை அதிகாரிகள், கண்காணிப்பு பொறியாளர் தலைமையில், ஒரு குழு பவானி ஆற்றை ஆய்வு செய்ய வந்தது. அவர்களிடம், கோவை மாநகராட்சி மூன்றாவது குடிநீர் திட்டம், திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டத்திற்கு கோடைகாலத்தில் நீர் எடுக்கும் போது, பவானி ஆறு முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
எனவே, இந்நிலையை போக்க, 'டொமான் பாறை' என்னுமிடத்தில் அணைகட்டி நீரை தேக்கினால், குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியும் என, தெரிவித்தோம். மேலும் மேட்டுப்பாளையம் -- சிறுமுகை இடையே உள்ள பவானி ஆற்றில், 17 குடிநீர் திட்டங்களுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் 700 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. அதனால், கதவணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி ஆற்றில் திறந்து விட வேண்டும். அப்போது தான் குடிநீர் திட்டங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியும் என தெரிவித்தோம்.
இவ்வாறு, கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
