/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உடற்பயிற்சி வகுப்பை கடன் கேட்காதீங்க'
/
'உடற்பயிற்சி வகுப்பை கடன் கேட்காதீங்க'
ADDED : ஜூலை 23, 2025 06:33 AM

சென்னை : ''பள்ளிகளில் உடற்கல்வி பயிற்சி வகுப்பை, மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்கக்கூடாது,'' என, ஆசிரியர்களை துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.
கடந்த, 2024 - 25ம் கல்வியாண்டில், சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற, 5,788 மாணவ, மாணவியருக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
விழாவில் சான்றிதழ்கள் வழங்கி, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண, இத்தகைய விழா கைகொடுக்கிறது. பாடப் புத்தகத்தின் வழியே கிடைக்கும் கல்வி மட்டும் கல்வி அல்ல. விளையாட்டிலும் கல்வியை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.
ஒத்துழைப்பு, குழுப்பணி, நம்பிக்கை, நட்பு, உத்தி, திட்டமிடல், செயல்படுத்துதல் என, வாழ்க்கைக்கு தேவையான பாடத்தையும் விளையாட்டு கற்று தரும்.
கல்வி, விளையாட்டு என, இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு லட்சியம் மற்றும் விடா முயற்சி வேண்டும். வெற்றி மட்டும் வரலாற்றில் இடம் பெறாது. விடா முயற்சியும் இடம் பிடிக்கும். உங்களுக்கு அனைத்து வகையிலும், அரசு உதவியாக இருக்கும்.
உடற்கல்வி பயிற்சி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்க கூடாது. வேண்டுமானால் அறிவியல் மற்றும் கணக்கு வகுப்பில், மாணவர்கள் உடற்கல்வி பயிற்சி வகுப்புக்கு செல்ல அனுமதி கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.