/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருவழிப்பாதையில் வாகனங்கள் அத்துமீறல்; விபத்து அபாயம் தவிர்க்க நடவடிக்கை தேவை
/
ஒருவழிப்பாதையில் வாகனங்கள் அத்துமீறல்; விபத்து அபாயம் தவிர்க்க நடவடிக்கை தேவை
ஒருவழிப்பாதையில் வாகனங்கள் அத்துமீறல்; விபத்து அபாயம் தவிர்க்க நடவடிக்கை தேவை
ஒருவழிப்பாதையில் வாகனங்கள் அத்துமீறல்; விபத்து அபாயம் தவிர்க்க நடவடிக்கை தேவை
ADDED : டிச 06, 2024 11:05 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, ரயில்வே மேம்பால பராமரிப்பு பணிக்காக ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் எச்சரிக்கை அறிவிப்பை மீறி, ஒரு வழிப்பாதையில் இயக்கப்படுவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய ரோடான, பொள்ளாச்சி --- பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி --- போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது. இங்கிருந்த, ரயில்வே கேட்டை கடப்பதற்கு, நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த, 2019ல் துவங்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு வாயிலாக, 55.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் நிறைவடைந்து, கடந்த, 2022ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மேம்பாலத்தில் சேதமடைந்திருந்த இரும்பு சட்டங்களை சீரமைக்கும் பணி, கடந்த மாதம், 15ம் தேதி நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முழு அளவில் முடியாமல் இருந்ததால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த சில வாரங்களாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பாலத்தில் ஒவ்வொரு வழித்தடமாக பணி மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி நோக்கி வரும் வழித்தடத்தில், இரும்பு சட்டங்கள் மாற்றியமைத்த பின், தற்போது பாலக்காடு நோக்கி செல்லும் வழித்தடத்தில் பணிகள் நடக்கிறது. பணி நடைபெறும் பகுதி மட்டும் மூடப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், விதிமுறை மீறி, ஒரு வழிப்பாதையிலேயே வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் தற்போது நடக்கிறது. அதில், ஒரு வழித்தடம் அடைக்கப்பட்டு பணிகள் நடப்பதால், மாற்று வழியில் செல்ல வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், வாகன ஓட்டுநர்கள் விதிமுறை மீறி, வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இதனால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே, அதிகாரிகள், போலீசார் இணைந்து கண்காணித்து, ஒரு வழிப்பாதையில் செல்லக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். மேலும், பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.