/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல்போன் பேசியபடி வாகனம் இயக்காதீங்க! சாலை பாதுகாப்பு விழாவில் அறிவுறுத்தல்
/
மொபைல்போன் பேசியபடி வாகனம் இயக்காதீங்க! சாலை பாதுகாப்பு விழாவில் அறிவுறுத்தல்
மொபைல்போன் பேசியபடி வாகனம் இயக்காதீங்க! சாலை பாதுகாப்பு விழாவில் அறிவுறுத்தல்
மொபைல்போன் பேசியபடி வாகனம் இயக்காதீங்க! சாலை பாதுகாப்பு விழாவில் அறிவுறுத்தல்
ADDED : ஜன 03, 2026 05:55 AM

பொள்ளாச்சி: 'சீட்பெல்ட்' அணிந்து நான்கு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும், மொபைல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க கூடாது, என, பொள்ளாச்சியில் நடந்த சாலை பாதுகாப்பு விழாவில் அறிவுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. அதில், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், நேற்று நான்கு சக்கர வாகனங்களில், 'சீட் பெல்ட்' அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் (பொ) சசிக்குமார், அரசு போக்குவரத்து பனிமனை பயிற்சி பள்ளி உதவி பொறியாளர் சுப்ரமணியம், பயிற்சி ஆய்வர் வெங்கடாசலம், முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதில், பொதுமக்கள், அனைத்து ஓட்டுநர் பயிற்சி பள்ளி மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை முவகர்கள் பங்கேற்றனர். மகாலிங்கபுரத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது.
அதில், மொபைல்போன் பேசிக்கொண்டோ, பார்த்துக்கொண்டோ, ப்ளூடூத் போன்ற உபகரணங்களை பயன்படுத்திக்கொண்டோ வாகனத்தை இயக்க கூடாது. 'சீட்பெல்ட்' அணியாமல் அதிவேகமாக, கவனக்குறைவாக வாகனத்தை இயக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
சாலை விதிகளையும், மோட்டார் வாகன சட்டங்கள், சிக்னல்கள், குறியீடுகள், வரைகோடுகள் இவற்றை மதித்து வாகனத்தை இடது புறமாக இயக்க வேண்டும்.சாலை சந்திப்புகள், சாலை வளைவுகள், ஓட்டுநர் கண் மறைவு பகுதிகளில் வேகத்தை குறைத்து எச்சரிக்கையுடனும், மற்ற வாகனங்களை முந்தாமலும், வாகனத்தை இயக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், ''இந்த மாதம்,31ம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதிக நபர்கள், சுமைகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக தணிக்கை செய்வது ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நடை பேரணி, கருத்தரங்கம், கண் பரிசோதனை முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.

