/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறுக்கு போன்று பாலாறு படுகைக்கும் வழங்கணும் வேண்டாமே பாரபட்சம்!நீர்வளத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பி வலியுறுத்தல்
/
ஆழியாறுக்கு போன்று பாலாறு படுகைக்கும் வழங்கணும் வேண்டாமே பாரபட்சம்!நீர்வளத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பி வலியுறுத்தல்
ஆழியாறுக்கு போன்று பாலாறு படுகைக்கும் வழங்கணும் வேண்டாமே பாரபட்சம்!நீர்வளத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பி வலியுறுத்தல்
ஆழியாறுக்கு போன்று பாலாறு படுகைக்கும் வழங்கணும் வேண்டாமே பாரபட்சம்!நீர்வளத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பி வலியுறுத்தல்
ADDED : பிப் 16, 2024 11:32 PM
பொள்ளாச்சி;'ஆழியாறு படுகைக்கு வழங்கப்படும் அதே அளவு விகிதாச்சாரத்தில், பாலாறு படுகைக்கு தண்ணீர் வழங்க வேண்டும்,' என, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பி.ஏ.பி., திட்டத்தில், பாலாறு படுகையில், 3,77,152 ஏக்கர் நிலங்கள், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன நீர் வழங்கப்படுகிறது. ஆழியாறு படுகையில், புதிய ஆயக்கட்டில் பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதுார், ஆழியாறு ஊட்டுக்கால்வாய், சேத்துமடைக்கால்வாய்கள் வழியாக மொத்தம், 44,378 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.ஆண்டுக்கு, 22,189 ஏக்கர் வீதம் ஒரு ஆண்டுக்கு, ஒரு மண்டலத்துக்கு பாசனம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஆழியாறு படுகைக்கு கூடுதலாக தண்ணீர் வழங்கியுள்ளதாகவும், ஒரே விகிதாச்சாரத்தில் தண்ணீர் வழங்க வேண்டும் என, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு சார்பில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
திட்டக்குழு மனு
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:
பி.ஏ.பி., திட்டத்தில், பல்வேறு காரணங்களினால் புன்செய் சாகுபடி கைவிடப்பட்டு,தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தென்னைக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவை என்பதால் இத்திட்டத்தில் ஒரு மடை விட்டு ஒரு மடை பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டது.
முந்தைய கால மழைப்பொழிவுக்கும், இன்றைய மழைப்பொழிவுக்கும் ஏராளமான ஏற்ற இறக்கங்கள் உள்ளன. அதனால், அந்தந்த ஆண்டுகளில் கிடைக்கும் தண்ணீரை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து, அந்தந்த பாசன பகுதிகளுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது.
சமீப காலமாக ஆழியாறு புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு அதிகப்படியான தண்ணீர் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது.
இரண்டும் புன்செய்
பி.ஏ.பி., திட்ட நீரை முறைப்படுத்தும் சட்டத்தில், ஆழியாறு புதிய ஆயக்கட்டு, பாலாறு படுகை புதிய ஆயக்கட்டு பகுதிகள் இரண்டும் ஒன்று தான், இரண்டு பகுதியிலும் புன்செய் பயிர்களுக்கு நீர் வழங்கப்படுகிறது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் படி, 30 ஆண்டுகளுக்கு மேலாக நீர் முறைப்படுத்தி வழங்கப்படுகிறது. அதன்பின், ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில், ஆழியாறு படுகைக்கு, 60 டியூட்டியில், ஒரு சுற்றுக்கு, ஏழு நாட்கள், பாலாறு படுகைக்கு, 120 டியூட்டியில், ஒரு சுற்றுக்கு, 14 நாட்கள் என பரிந்துரை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், ஆழியாறு படுகையில், 60 டியூட்டியில் ஏழு நாட்களுக்கு ஒரு சுற்றுத் தண்ணீர் என்பதற்கு பதிலாக, 15 நாட்கள் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு சுற்றுக்கு ஒரு பங்கு தண்ணீர் கூடுதலாக வழங்கப்படுகிறது.
பாலாறு படுகைக்கு கூடுதலாக ஒரு பங்கு தண்ணீர் வழங்க வேண்டும்; ஆனால், அவ்வாறு வழங்குவதில்லை. ஓரவஞ்சனை செய்யப்படுகிறது.
பாலாறு படுகை முதல் மண்டல பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, ஆழியாறு படுகைக்கு மூன்றாவது சுற்றுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என போராட்டம் செய்தனர்.
ஆழியாறுக்கு கூடுதல் நீர்
பொள்ளாச்சி சப் - கலெக்டர் முன்னிலையில், இரு தரப்பினரும் பேசி முடிவு எடுக்கலாம் என கூறப்பட்டதாக, பாலாறு படுகை திட்டக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், பேச்சு நடத்தவில்லை. ஆழியாறு படுகைக்கு கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் வழங்குவதாக பாலாறு படுகை விவசாயிகளுக்கு தெரியவந்தது.
ஒரு திட்டத்தில் ஒரு பகுதிக்கு மூன்று சுற்றும், மற்றொரு பகுதிக்கு இரண்டு சுற்று தண்ணீரும் வழங்குவது முறையற்ற செயல் என, அதிகாரிகளிடம் தெரிவித்தோம். இறுதியில், ஆழியாறு படுகைக்கு மூன்று சுற்று தண்ணீர் கொடுப்பது போல, பாலாறு படுகை முதல் மண்டல பாசனத்துக்கும் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர் வரத்தை கணக்கில் கொண்டு, முதல் மண்டல பாசனத்துக்கு இரண்டரை சுற்று தண்ணீர் (5,000 மில்லியன் கனஅடி) வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலாறு படுகைக்கு இரண்டரை சுற்றுகள் வழங்கப்படும் என்றனர்.
உண்மையல்ல
ஆழியாறு படுகைக்கு ஒரு சுற்றுக்கு, 15 நாட்களுக்கு பதிலாக, 19 நாட்களுக்கு, 610 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்கப்படும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாலாறு படுகை விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நீர் வளத்துறை அதிகாரிகள், பாலாறு படுகைக்கு கூடுதலாக வழங்குவதாகவும், ஆழியாறு படுகைக்கு குறைவாக வழங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மையல்ல. ஆழியாறு படுகைக்கு தான் அதிகப்படியான நீர் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஒரே விகிதாச்சாரத்தில் தண்ணீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.