/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'செவித்திறன் குறைபாட்டை அலட்சியம் செய்யாதீங்க'
/
'செவித்திறன் குறைபாட்டை அலட்சியம் செய்யாதீங்க'
ADDED : அக் 30, 2025 12:12 AM
கோவை: கோவை அரசு மருத்துவமனையில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் (டி.இ.ஐ.சி.,) செயல்படுகிறது. இங்கு, 0 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளின் ஒருங்கிணைந்த நலம் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு உள்ள உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி குறித்த குறைபாடுகளை முன்கூட்டியே அறிந்து, அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கண் பரிசோதனை, பல் மருத்துவம், பிசியோதெரபி, பேச்சு பயிற்சி, உளவியல் உட்பட பல்வேறு சிகிச்சை, பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. செவித்திறன் பாதிப்பு உடனடியாக கவனிக்காமல் விடும் பட்சத்தில் பேச்சுத்திறனும் பாதிக்கப்படும்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறுகையில், ''ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் காது கேட்கும் திறன் பரிசோதித்து, அவசியம் உள்ளவர்களுக்கு காக்லியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை, 300க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தோராயமாக, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அறுவை சிகிச்சை, அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. செவித்திறன் குறைபாடுகளை அலட்சியப்படுத்தக்கூடாது,'' என்றார்.

