/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரடைப்பு அறிகுறிகளை குழந்தைகளிடம் கண்டால் அலட்சியம் கூடாது !
/
மாரடைப்பு அறிகுறிகளை குழந்தைகளிடம் கண்டால் அலட்சியம் கூடாது !
மாரடைப்பு அறிகுறிகளை குழந்தைகளிடம் கண்டால் அலட்சியம் கூடாது !
மாரடைப்பு அறிகுறிகளை குழந்தைகளிடம் கண்டால் அலட்சியம் கூடாது !
ADDED : மார் 29, 2025 11:44 PM

கோவை: குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் இறப்புகள், அனைத்தும் மாரடைப்பால் ஏற்படுவது அல்ல. இதய கோளாறு சார்ந்த அறிகுறிகளை, அலட்சியமாக விட்டதன் விளைவுகளே என, இதய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சமீப காலமாக பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு, மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதற்கான காரணம் குறித்து, கோவை அரசு மருத்துவமனை இருதயத்துறை தலைவர் டாக்டர் நம்பிராஜன் கூறியதாவது:
குழந்தைகளின் திடீர் இறப்புக்கு, மாரடைப்பு மட்டும் காரணமல்ல. முன்பே இதயம் சார்ந்த பாதிப்புகள் இருந்து, அறிகுறிகளும் தென்பட்டு இருக்கும். அதை அலட்சியமாக விடுவதால், இறப்பு ஏற்படுகிறது.
ரத்த குழாய் ஒரே மாதிரி அல்லாமல், வேறுபாடுகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் திடீர் மரணம் வரலாம். தவிர, இருதய தசைகளின் தடிமன் பெரிதாக இருப்பவர்களுக்கும், லாங் க்யூட்டி சிண்ட்ரோம், மயோர்கார்டிடிஸ், பிருகடா சிண்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்கும் இதுபோன்று திடீர் மாரடைப்பு வரலாம்.
இதனை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை பெற்றால், இறப்புகளை தடுக்க வழிவகை உள்ளது.
குறிப்பாக, சாதாரண வைரஸ் காய்ச்சல் சில நேரங்களில் இதய தசையை பாதித்து ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும்.
இதனை, 'மயோர்கார்டிடிஸ்' என்று கூறுகின்றோம். இதய பாதிப்பு இருப்பின் சில அறிகுறிகள் தென்படும். அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டும்.
இதய பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, லேசான நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், தலைச்சுற்று, கிறுகிறுப்பு, மயக்கம், இதய படபடப்பு, விளையாட்டுக்களில் ஈடுபட்டால் அதிக மூச்சுத்திணறல், தலைசுற்றல், படி ஏறுவதில் சிரமம் இருக்கும்.
தாமதிக்காமல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அதே போன்று, பரம்பரையில் சிறு வயதில் திடீர் மாரடைப்பு யாருக்கேனும் ஏற்பட்டு இருப்பின், குழந்தைகளுக்கும் அப்பாதிப்பு இருக்க வாய்ப்புகள் உண்டு.
இவ்வாறு, அவர் கூறினார்.