/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வைரஸ் காய்ச்சலா அலட்சியம் வேண்டாம்'
/
'வைரஸ் காய்ச்சலா அலட்சியம் வேண்டாம்'
ADDED : ஜன 28, 2025 11:29 PM
மேட்டுப்பாளையம்; மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில், ஜி.பி.எஸ்., என்றழைக்கப்படும், கிலன் பா சிண்ட்ரோம் பாதிப்பால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தொற்று நோய் இல்லை என்பதால், அச்சப்படத் தேவையில்லை என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறியதாவது:-
ஜி.பி.எஸ். எனப்படும் கிலன் பா சிண்ட்ரோம், உடலின் தசை இயக்கத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதிக்கிறது. உணர்வுகள் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை முடக்குகிறது. இதனால்,கால்கள் அல்லது கைகளில் உணர்திறன் இழக்கச் செய்கிறது.
இந்த பாதிப்பு ஏற்படும்போது, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மிகத்தீவிரமாக செயல்படுவதால், அது நரம்பு மண்டலத்தை முடக்குவதாகக் கூறப்படுகிறது. வைரஸ் காய்ச்சல் பாதித்த பின், இந்த ஜி.பி.எஸ்., பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
காய்ச்சல் வந்தால் அலட்சியம் காட்டக்கூடாது. தானாக மருந்து மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. மருத்துவர்களை உடனே அணுக வேண்டும். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், வைரஸ் காய்ச்சல் மற்றும் இது போன்ற ஜி.பி.எஸ்., பாதிப்பு வந்தாலும், அதற்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ளது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் எப்போதும் தயார் நிலையில் மருத்துவர்கள் இருப்பார்கள். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சத்துள்ள உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் மாறுதலை கண்டறிந்து அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகினாலே போதும், பாதிப்பு வராது.
இவ்வாறு அவர் கூறினார்.