/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜனங்களுக்கு குடிநீர் கொடுக்க விட மாட்டேங்கிறாங்க! பா.ஜ., எம்.எல்.ஏ.,வின் திட்டத்தை எதிர்க்கும் கவுன்சிலர்கள்
/
ஜனங்களுக்கு குடிநீர் கொடுக்க விட மாட்டேங்கிறாங்க! பா.ஜ., எம்.எல்.ஏ.,வின் திட்டத்தை எதிர்க்கும் கவுன்சிலர்கள்
ஜனங்களுக்கு குடிநீர் கொடுக்க விட மாட்டேங்கிறாங்க! பா.ஜ., எம்.எல்.ஏ.,வின் திட்டத்தை எதிர்க்கும் கவுன்சிலர்கள்
ஜனங்களுக்கு குடிநீர் கொடுக்க விட மாட்டேங்கிறாங்க! பா.ஜ., எம்.எல்.ஏ.,வின் திட்டத்தை எதிர்க்கும் கவுன்சிலர்கள்
ADDED : பிப் 17, 2025 12:19 AM

கோவை; ''ஏ.டி.எம்., இயந்திரங்களின் வாயிலாக, 24 மணி நேர குடிநீர் சேவை வழங்கும் திட்டம், மாநகராட்சி ஒத்துழைத்தால் மேலும் சிறப்பாகும்,'' என்று, பா.ஜ., எம்.எல்.ஏ.,வானதிசீனிவாசன் கூறினார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 19 வார்டுகளில், 16 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீரை வழங்கும் வாட்டர் ஏ.டி.எம்.இயந்திரங்களை, எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றபின்பு ஏற்படுத்திக்கொடுத்தார் வானதி.
இதில் 12 வாட்டர் ஏ.டி.எம்.கள் தொகுதி எம்.எல்.ஏ., நிதியிலும், மீதமுள்ள நான்கு சி.எஸ்.ஆர்.,நிதி வாயிலாகவும் பெற்று அமைத்தார். மக்களின் வேண்டுகோளின் பெயரிலேயே, வாட்டர் ஏ.டி.எம்.,கள் அமைத்துக்கொடுக்கப்பட்டன.
ஒவ்வொரு ஏ.டி.எம்.,களிலும் உள்ள போர்வெல்களை பராமரிக்கும் பணியும், அதற்கான மின் இணைப்பு உள்ளிட்டவைகளை, மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதை மாநகராட்சி நிர்வாகம் சரியாக மேற்கொள்வதில்லை.
அதனால் எம்.எல்.ஏ., தரப்பில், இதை பராமரிக்க குழு ஏற்படுத்தி, போர்வெல் மோட்டார்கள் பழுதானால் மாற்றம் செய்வதற்கு, ஐந்து போர்வெல் மோட்டார்கள் தயார்நிலையில் வைத்திருக்கின்றனர்.
அது தவிர தண்ணீர் வராதது, மின்பழுது, பியூஸ் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் போர்வெல் பராமரிக்கவும், பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான வார்டு கவுன்சிலர்கள், குடிநீர் மக்களுக்கு கிடைக்க வேண்டும்; ஆளுங்கட்சியாக இருந்தால் என்ன; எதிர்கட்சியாக இருந்தால் என்ன என்று, வாட்டர் ஏ.டி.எம்.திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
63வது வார்டு ராமநாதபுரம் 80 அடி சாலை, 70வது வார்டு ம.ந.க.,வீதியிலும் வாட்டர் ஏ.டி.எம்.,களை அமைக்க மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதன் அடிப்படையில், எம்.எல்.ஏ., முயற்சித்தார். ஆனால் கவுன்சிலர்களின் எதிர்ப்பு காரணமாக அமைக்கப்படவில்லை. இது குறித்து, கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கையும் இல்லை.
'திட்டத்தை முடக்க மாநகராட்சி முயற்சி'
கோவை தெற்கு தொகுதி பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் கூறியதாவது:
மக்கள் அன்றாடம் பருகும் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு, கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு, பணிகளை மேற்கொள்ளாமல் திட்டத்தை எப்படியும் முடக்கிவிடலாம் என்று முயற்சிக்கிறது. அதனால் நாங்களே பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சி.எஸ்.ஐ.,ஆண்கள் பள்ளி சாலையில், மாவட்ட கால்நடை மருத்துவமனை அருகே வாட்டர் ஏ.டி.எம்.,மையம் இயங்கி வருகிறது. ஆனால் அங்கு குப்பை கொட்டி மக்களுக்கு அருவருப்பை ஏற்படுத்துகின்றனர்.
அதே போல், உக்கடம் வின்சென்ட் சாலையில் அமைக்க முயற்சித்தோம். அந்த வார்டு கவுன்சிலரின் எதிர்ப்பு காரணமாக அமைக்கவில்லை.
இப்படி பல எதிர்ப்புகளையும் மீறி, 16 வாட்டர் ஏ.டி.எம்., களையும், ஒரு வாட்டர் டாக்டர் இயந்திரத்தையும், காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நிறுவியிருக்கிறோம்.
மாநகராட்சி நிர்வாகம் ஒத்துழைத்தால், குடிநீர் வினியோகிக்கும் வாட்டர் ஏ.டி.எம்., திட்டம் சிறப்பாகும். மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, வானதி கூறினார்.