/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் கொள்ளையர்களை விடக்கூடாது! மூன்று வழக்குகள் பதிவு; கைது நடப்பது எப்போது?
/
மண் கொள்ளையர்களை விடக்கூடாது! மூன்று வழக்குகள் பதிவு; கைது நடப்பது எப்போது?
மண் கொள்ளையர்களை விடக்கூடாது! மூன்று வழக்குகள் பதிவு; கைது நடப்பது எப்போது?
மண் கொள்ளையர்களை விடக்கூடாது! மூன்று வழக்குகள் பதிவு; கைது நடப்பது எப்போது?
ADDED : செப் 23, 2024 11:22 PM

தொண்டாமுத்தூர் : பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் மண் கொள்ளை சம்பவத்தில், நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டதன் எதிரொலியாக, 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆனால், நேற்று மாலை வரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால், பெயரளவுக்குதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பேரூர் தாலுகாவிற்குட்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் இருந்து, கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மண் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் வனவிலங்குகளின் வழித்தடங்களிலும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தினமலர் செய்தி எதிரொலி
இதுகுறித்து நமது நாளிதழில், தொடர்ந்து உரிய ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு வந்தோம். கனிமவளத்துறை, வருவாய் துறை மற்றும் போலீசார், அவ்வப்போது பெயரளவிற்கு நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இருப்பினும், மண் கொள்ளை தொடர்ந்து நடந்து வந்தது. இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டில் சிவா என்பவர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, மண் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து, இயந்திரங்களை பறிமுதல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன் எதிரொலியாக, சட்டவிரோதமாக மண் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில், கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷனில், வலையன்குட்டை பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில், சுமார் 10 அடி ஆழத்திற்கும், 30 அடி நீளத்திற்கும் முறைகேடாக செம்மண் திருடப்பட்டு இருப்பதாக, ஆலாந்துறை வி.ஏ.ஓ., விக்னேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, வெள்ளிமலைபட்டிணம் கிராமத்தில், மலையடிவாரத்தில் உள்ள கருப்புசாமி என்பவரின் பட்டா நிலத்தில், அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த மற்றும் எடுக்க அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெள்ளிமலைபட்டிணம் வி.ஏ.ஓ., கங்கேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், மண் வெட்டி எடுக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் கருப்புசாமி மீது, ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெள்ளெருக்கம்பாளையம், கோடாங்கி பள்ளம் அருகில் உள்ள சோலை என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், அனுமதியின்றி கிராவல் மண் தோண்டி எடுத்துள்ளதால், நிலத்தின் உரிமையாளர் சோலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேவராயபுரம் வி.ஏ.ஓ., கோமதி, தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில், நில உரிமையாளர் சோலை மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மூன்று வழக்குகள் பதிவு
ஐகோர்ட் உத்தரவு எதிரொலியாக, மண் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், மண் வெட்டி எடுக்கப்பட்ட பட்டா நிலங்களின் உரிமையாளர்கள் மீது மட்டும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புறம்போக்கு நிலத்தில், மண் வெட்டி எடுத்தவர்கள் யாரென்று தெரியாததால், குற்றவாளியின் பெயர் விடுபட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்குகளில் நேற்று வரை, யாரும் கைது செய்யப்படவில்லை. மண் அள்ளிய இயந்திரங்கள் மற்றும் லாரிகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இது, சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல பெயரளவுக்கு மட்டும் நடவடிக்கை இல்லாமல், முறையாக விசாரணை நடத்தி, இவ்வழக்குகளில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து, மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.