/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திசிலை அருகே போராட்டம் நடத்தாதீங்க! அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள்
/
காந்திசிலை அருகே போராட்டம் நடத்தாதீங்க! அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள்
காந்திசிலை அருகே போராட்டம் நடத்தாதீங்க! அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள்
காந்திசிலை அருகே போராட்டம் நடத்தாதீங்க! அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள்
ADDED : ஆக 15, 2025 08:57 PM
வால்பாறை; காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் கட்சிக்கூட்டம், போராட்டம் நடத்த போலீசார் தடை விதிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை காந்திசிலை வளாகம், கடந்த, 21 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் காந்திசிலை வளாகத்தில் இருந்து தான் புறப்படுகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக அரசியல் கட்சிக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் கட்சி விழாக்கள் காந்திசிலை வளாகத்தில் நடத்தப்படுகின்றன. மக்கள் அதிகளவில் வந்து செல்லும் காந்திசிலை பஸ் ஸ்டாண்டில், இது போன்ற நிகழ்ச்சி நடப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: எஸ்டேட் பகுதியில் இருந்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வால்பாறை வர வேண்டியுள்ளது. குறிப்பாக, தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வால்பாறை நகருக்கு அதிக மக்கள் வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில், காந்திசிலை வளாகத்தில் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து கட்சிக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதால், பஸ்கள் காந்திசிலை வருவதில்லை. இதனால், ஒரு கி.மீ., துாரம் நடந்து சென்று, பஸ் ஏற வேண்டியுள்ளது.
அரசியல் கட்சியினரின் இந்த செயலால் பொதுமக்கள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணியர், வியாபாரிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, கட்சிக்கூட்டங்களை அண்ணாதிடலில் மட்டுமே நடத்த போலீசார் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
போலீசார் கூறுகையில், 'காந்திசிலை வளாகத்தில் கட்சிக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கும் வகையில் காந்திசிலை வளாகத்தில் கட்சி கூட்டம் நடத்துவதை அரசியல்கட்சியினர் தவிர்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடத்த வேண்டும்,' என்றனர்.

