/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழுநோய் கண்டறியும் பணி வீடு வீடாக பரிசோதனை
/
தொழுநோய் கண்டறியும் பணி வீடு வீடாக பரிசோதனை
ADDED : மார் 17, 2024 11:58 PM

ஆனைமலை:தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தில், பொது சுகாதாரத்துறை வாயிலாக, கோவை மாவட்டத்தில், வீடு வீடாகச்சென்று, தொழுநோய் பரிசோதனை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில், ஆனைமலையில், ஆழியார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தொழுநோய் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது.
வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லதுரை தலைமையில், சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார், மக்களைத் தேடி மருத்துவ சுகாதார ஆய்வாளர்கள் நவீன், அன்பு அடங்கிய குழுவினர் இப்பணியை மேற்கொண்டனர்.
கோட்டூர், மலையாண்டிபட்டணம் பகுதிகளில், 145க்கும் மேற்பட்ட வீடுகளில் நேரடியாகச் சென்று, உணர்ச்சியற்ற தேமல் உள்ளதா என பரிசோதனை செய்னர்.
தவிர, மக்களிடையே தொழுநோய் பாதிப்பு மற்றும் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், கணக்கெடுப்பும் நடத்தினர்.
அதில், புதிதாக ஒரு நோயாளி கண்டறியப்பட்டு உயர் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தொழுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால், அவர்களுக்கு, முறையான கூட்டு மருந்து சிகிச்சை வாயிலாக, நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.

