/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரட்டிப்பு மகிழ்ச்சி! பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயில்: தீபாவளி பரிசாக பயணியர் கொண்டாட்டம்
/
இரட்டிப்பு மகிழ்ச்சி! பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயில்: தீபாவளி பரிசாக பயணியர் கொண்டாட்டம்
இரட்டிப்பு மகிழ்ச்சி! பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயில்: தீபாவளி பரிசாக பயணியர் கொண்டாட்டம்
இரட்டிப்பு மகிழ்ச்சி! பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயில்: தீபாவளி பரிசாக பயணியர் கொண்டாட்டம்
ADDED : அக் 17, 2025 11:17 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன், 110வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், கால் நுாற்றாண்டு போராட்டத்துக்கு பின், ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்குவது மகிழ்ச்சியளிப்பதாகவும், தீபாவளி பரிசாகவும் பொள்ளாச்சி ரயில் பயணிகள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
பொள்ளாச்சி சந்திப்பு, 1850-ல் வணிகத்துக்காக ரயில் நிலையமாக பயன்படுத்தப்பட்டது. 1900க்குப் பிறகு, இது பயணியருக்கான நிலையமாக பயன்படுத்தப்பட்டது. கடந்த, 1915ம் ஆண்டு பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை மீட்டர்கேஜ் பிரிவாக முதல் சேவை துவங்கியது. அதன்பின், 1928ல் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரையிலும், 1932ல் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கும் ரயில் சேவைகள் துவங்கப்பட்டன.
பொள்ளாச்சி வழியாக பாலக்காடு, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டன.கடந்த, 2008ம் ஆண்டு அகல ரயில் பாதை பணிக்காக ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நடந்த பணி நிறைவடைந்த பின், கடந்த, 2015ல் மீண்டும் ரயில்சேவை துவங்கப்பட்டது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன், மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 7.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டு, 110 வயதில் அடியெடுத்து வைத்துள்ளது. 25 ஆண்டுகால கோரிக்கையான ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மதியம் ராமேஸ்வரம் சென்றடைந்தது.
சிறப்பு ரயில்கள்
கோவை - திண்டுக்கல்லுக்கு முன்பதிவில்லா 'மெமு' ரயில் (06139), திண்டுக்கல் - கோவை (06140) ரயில்கள் நேற்று துவங்கப்பட்டது. இன்று (18ம் தேதி), 21 மற்றும், 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன.
காலை, 9:35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் மெமு ரயில், காலை, 10:13 மணிக்கு கிணத்துக்கடவு, பொள்ளாச்சிக்கு 11:07, உடுமலைக்கு 11:33 மணிக்கு செல்கிறது. மதியம், 1:10 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது.
மதியம், 2:00 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ரயில், உடுமலைக்கு மாலை, 3:35 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 4:17 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 4:43மணிக்கு செல்கிறது. கோவைக்கு, மாலை 5:50 மணிக்கு சென்றடைகிறது.
ஸ்டேஷனுக்கு 110 வயது, ராமேஸ்வரம் ரயில் இயக்கம், சிறப்பு ரயில் என அடுத்தடுத்த அறிவிப்புகளை தீபாவளி பரிசாக ரயில் பயணியர் கொண்டாடுகின்றனர்.
நம்பிக்கை
பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
பொள்ளாச்சி ஸ்டேஷனுக்கு, 110 வயது ஆகியுள்ள நிலையில், கால் நுாற்றாண்டு போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது போன்று ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்கப்படுகிறது.ராமேஸ்வரம் ரயில். தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம் போன்றவை மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் டபுள் டக்கர் ரயிலை பொள்ளாச்சியில் இருந்தோ அல்லது பொள்ளாச்சி வழியாக நீட்டிக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மெமு பயணியர் ரயிலை, 'ஆனைமலை ரோடு' ரயில்வே நிறுத்தத்துடன், பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக சென்னைக்கு இரவு நேர தினசரி ரயில் இயக்க வேண்டும். ரயில் இயக்கம் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
இவ்வாறு, கூறினர்.