வரையாடுகள் கணக்கெடுப்பு துவக்கம் 176 இடங்களில் நடக்கிறது
வரையாடுகள் கணக்கெடுப்பு துவக்கம் 176 இடங்களில் நடக்கிறது
ADDED : ஏப் 24, 2026 06:30 PM

ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில், வரையாடுகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம் கடந்த, 2022ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன்படி, நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை அறிவது; அதன் வாழ்விடங்களை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதல் முறையாக கடந்தாண்டு ஏப்., மாதம் வரையாடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக, கேரள வனப்பகுதிகளில், இரு மாநில வனத்துறையினரும் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.
இந்த கணக்கெடுப்பில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் முக்கூர்த்தி தேசிய பூங்கா, வால்பாறை, பொள்ளாச்சி வனச்சரகம் உள்ளிட்ட இடங்களில், 1,331 வரையாடுகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்பு, தமிழக - கேரளா வனத்துறையினர் இணைந்து இன்று முதல், 27ம் தேதி வரை நான்கு நாட்கள் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட, ஆழியாறு மங்கரை சுற்று பகுதிகளில் நேற்று காலை முதல் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டன. ஒரு உயிரியலாளர், ஒரு வனக்காப்பாளர், இரண்டு வேட்டை தடுப்பு காவலர் என நான்கு பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கணக்கெடுப்பில் வரையாடுகளில் எச்சம், கால் தடம் மற்றும் நேரில் பார்ப்பதை ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில், 176 இடங்களில், வரையாடுகள் கணக்கெடுப்பு நடக்கிறது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
