/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்புகளில் புகுந்த மழை நீர் வெளியேற்றம்
/
குடியிருப்புகளில் புகுந்த மழை நீர் வெளியேற்றம்
ADDED : அக் 21, 2025 12:58 AM

அன்னுார்: பழனி கிருஷ்ணா அவென்யூ பகுதியில் மழை நீரில் 50 சதவீதம் மட்டுமே வெளியேற்றப்பட்டது.
அன்னுார் வட்டாரத்தில், நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணி முதல் 3:00 மணி வரை, கனமழை பெய்தது. இதனால் மழைநீர் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழனி கிருஷ்ணா அவென்யூவில் 40 வீடுகளுக்குள் புகுந்தது. இதைத்தொடர்ந்து அருகில் உள்ள தோட்டத்தில் மண் மேடுகளை அகற்றி மழை நீரை வெளியேற்ற துவங்கினர். எனினும் இரண்டு மணி நேரம் மட்டுமே மழை நீர் வெளியேற்றப்பட்டது.
அதன் பிறகு சிலர் இதை எதிர்த்து தீக்குளிப்போம் என மிரட்டல் விடுத்ததை அடுத்து தோட்டங்கள் வழியாக மழை நீர் வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து தாச பாளையம் சாலையை ஒட்டி இரண்டடி அகலம் இரண்டடி ஆழத்திற்கு 200 மீட்டர் தூரத்திற்கு குழி தோண்டப்பட்டது. அந்த குழி வழியாக தற்போது தண்ணீர் வெளியேறி கிழக்கில் உள்ள மந்தி வயல் தோட்டம் உள்ளிட்ட பல தோட்டங்களில் புகுந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. பழனி கிருஷ்ணா அவென்யூவில் 50 சதவீத நீர் மட்டுமே வெளியேறியதால் இரண்டு வீதியில் உள்ள தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. மீதி உள்ள இரண்டு வீதி மக் கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. இரண்டாவது நாளாக நேற்றும் வீடுகளைச் சுற்றி மழை நீர் இரண்டடி உயரத்திற்கு தேங்கி நிற்கிறது.
விவசாயிகள் கூறுகையில், 'தோட்டத்தில் பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்கள் தேங்கும் நீரால் அழுகி வருகின்றன. தோட்டங்களுக்குள் தண்ணீர் வராமல் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், நாளை (இன்று) இரண்டு மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்படும், என்றார்.