ADDED : பிப் 19, 2025 10:15 PM

மேட்டுப்பாளையம்; அன்னூர் சாலையில் குழாய் உடைந்து, இரவு பகலாக குடிநீர், வீணாக வெளியேறி வருகிறது.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், திருப்பூர் மாநகராட்சி, காரமடை நகராட்சி மற்றும் பெள்ளாதி ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் மூன்று திட்டத்தின் வாயிலாக, தினமும் பல லட்சம் மக்கள், குடிநீர் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
கடந்த வாரம் அன்னூர் சாலையை, நான்கு வழி சாலையாக விரிவாக்கத்துக்கு அளவீடு செய்வதற்கு, டேங்க் மேடு அருகே இடையூறாக இருந்த மரங்களை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக அப்புறப்படுத்தினர்.
அப்போது பொக்லைன் இயந்திரம் மரங்களை தோண்டி அகற்றும் போது, ஏதோ ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில், கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக, பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இந்த குழாய் உடைப்பை சரி செய்ய, திருப்பூர் மாநகராட்சி, காரமடை நகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய மூவரில் யாரும் முன் வரவில்லை. வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன், இந்த குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கூறினர்.
