/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைப்பினால் சாக்கடையில் கலக்கும் குடிநீர்
/
குழாய் உடைப்பினால் சாக்கடையில் கலக்கும் குடிநீர்
ADDED : ஜன 16, 2024 10:37 PM

மேட்டுப்பாளையம்;குழாயில் ஏற்பட்ட உடைப்பை அடுத்து, தினமும் இரவு பகலாக, பல லட்சம் லிட்டர் குடிநீர், வீணாக சாக்கடையில் செல்கிறது.
மேட்டுப்பாளையம் நகரில், பவானி ஆற்றில் இருந்து, திருப்பூர் மாநகராட்சிக்கும், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கும், குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் திருப்பூர் மாநகராட்சியின் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கு, தினமும் மூன்று கோடியே, 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, சுத்தம் செய்து, திருப்பூர், அன்னூர், அவிநாசி, அனுப்பர்பாளையம் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது குடிநீர் திட்ட குழாயில், மேட்டுப்பாளையம் நகரில் இருந்து அன்னூர் சாலையில், குமரன் குன்று வரை மூன்று இடங்களில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரவு பகலாக பல லட்சம் லிட்டர் குடிநீர், வீணாக சாக்கடையிலும், சாலையின் ஓரங்களிலும் செல்கின்றன. அதில் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை நடூரில், குழாயில் ஏற்பட்ட உடைப்பால், மின் மோட்டாரில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல், குழாய் உடைப்பில் இருந்து வெளியேறி, சாக்கடையில் ஊற்றி வருகிறது.
திருப்பூர், அன்னூர், அவிநாசி, அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளில், குடிநீர் பற்றாக்குறையால், மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகரில் திருப்பூர் குடிநீர் திட்ட குழாயிலிருந்து, பல லட்சம் லிட்டர் குடிநீர், வீணாக சாக்கடையில் கலப்பதை தவிர்க்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

