/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதியில் முடியும் ஓட்டுனர்களின் பயணம்! மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்துவதால் ஆபத்து
/
பாதியில் முடியும் ஓட்டுனர்களின் பயணம்! மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்துவதால் ஆபத்து
பாதியில் முடியும் ஓட்டுனர்களின் பயணம்! மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்துவதால் ஆபத்து
பாதியில் முடியும் ஓட்டுனர்களின் பயணம்! மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்துவதால் ஆபத்து
ADDED : மே 31, 2025 05:05 AM

கோவை; டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என்கின்றனர் டாக்டர்கள்.
சமீபகாலமாக பஸ் டிரைவர்களுக்கு, மாரடைப்பு ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான டிரைவர்கள், கண்டக்டர்கள் உடல்நலம் குறித்து கவலைப்படுவதில்லை. இதன் காரணமாக பணியின் போது, மாரடைப்பு ஏற்படுகிறது.
வரும் காலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, உடல்நலப் பிரச்னை உள்ள டிரைவர்கள், கண்டக்டர்களை மருத்துவ சிகிச்சைக்கு கட்டாயப்படுத்தி, அதற்கான ஆதாரங்களை காட்டினால் மட்டுமே, பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மட்டுமின்றி, பயணிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
அரசு போக்குவரத்துக் கழக அலுவலர் ஒருவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகள் மூலம், டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தேவையான கண் பரிசோதனை, முழு உடல் பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு பயிற்சிகள் நடத்தும் போது, அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது.
அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்களில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில், நோய் அறிகுறிகள் குறித்து கண்டறிந்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால், டிரைவர்கள், கண்டக்டர்கள் அதன் பின் தொடர் சிகிச்சைக்கு செல்வதில்லை. பணி பாதிக்கும் என கருதி, வெளியிலும் சொல்வதில்லை. டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு இன்சூரன்ஸ் உள்ளது. அதன் மூலம் அவர்கள் தேவையான சிகிச்சை பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச., கோவை மண்டல பொதுச்செயலாளர் பெரியசாமி கூறுகையில், ''வாகனங்கள் பெருகிவிட்டன. சாலை விரிவாக்கம் இல்லை. பொதுப்போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. இதுதவிர, பணி பளு ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. டிரைவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.