ADDED : மார் 01, 2026 06:09 AM

போத்தனூர்: மதுக்கரையில் தொழில்நுட்பம் சார்ந்த வனவிலங்கு பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக, ட்ரோன் கண்காணிப்பு பிரிவு நேற்று துவக்கப்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்துடன் இணைந்து, துவக்கி வைத்தார்.
செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் மற்றும் வெப்ப இமேஜிங் திறனுடைய, 24 x7 கண்காணிப்பு அடிப்படையில் இணைக்கப்பட்ட ட்ரோன் அமைப்பு, யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும். யானைகள் ரயில் பாதைகளின் அருகே கண்டறியப்பட்டதும், ஒலிபெருக்கிகள், தேடல் விளக்குகள் பொருத்தப்பட்ட கண்காணிப்பு ட்ரோன்களை மீட்பு குழுக்கள் பயன்படுத்துகின்றன.
அது யானைகளை வனத்தினுள் பாதுகாப்பாக வழி நடத்த உதவுகின்றன. இதன் மூலம் மனித -- வனவிலங்கு மோதல், ரயில் விபத்துகள் தடுக்கப்படுகின்றன.
துவக்க நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, கலெக்டர் பவன்குமார், முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாஸ் ரெட்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, ''இனி சில பிளாக் ஸ்பாட்களிலும் யானைகள் நடமாட்டம் கண்டறிவது எளிதாகும். ஏ மற்றும் பி லைன்களில், ஏழு கி.மீ., தொலைவிற்கு இக்கண்காணிப்பு இருக்கும். 2.5 கி.மீ. தொலைவிற்கு அப்பால் யானைகள் வரும்போதே கண்டறிந்து, காப்பாற்ற இயலும். இது கோவை மாவட்டத்தில்தான் முதல்முறையாக செயல்படுத்தப்படுகிறது. பிற மாநிலத்தவர் கேட்டாலும் உதவிட தயாராக உள்ளோம்,'' என்றார்.
