/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிட்கோ அறிவித்த பகுதியில் டிரோன்; சர்வே செய்தவர்கள் சிறைபிடிப்பு
/
டிட்கோ அறிவித்த பகுதியில் டிரோன்; சர்வே செய்தவர்கள் சிறைபிடிப்பு
டிட்கோ அறிவித்த பகுதியில் டிரோன்; சர்வே செய்தவர்கள் சிறைபிடிப்பு
டிட்கோ அறிவித்த பகுதியில் டிரோன்; சர்வே செய்தவர்கள் சிறைபிடிப்பு
ADDED : டிச 17, 2024 11:41 PM
அன்னுார்; 'டிட்கோ' தொழில்பேட்டை அமைப்பதாக அறிவிக்கப்பட்ட பகுதியில் டிரோன் சர்வே செய்தவர்களை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
அன்னுார் தாலுகாவில் குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலுார், பொகலுார், மேட்டுப்பாளையம் தாலுகாவில் பெள்ளேபாளையம், இலுப்பநத்தம் ஆகிய ஊராட்சிகளில் தொழில்பேட்டை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து யாரிடமிருந்தும் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை காரில் வந்த ஆறு பேர் கொண்ட குழு டிரோன் மூலம் அக்கரை செங்கப்பள்ளி மற்றும் குப்பனுார் ஊராட்சிகளில் சர்வே பணியில் ஈடுபட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 'நமது நிலம் நமதே அமைப்பினர் மற்றும் விவசாயிகள் அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் ஆறு பேரையும் சிறை பிடித்தனர். அவர்களிடமிருந்து டிரோனை பறிமுதல் செய்தனர்.
அன்னுார் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர். சர்வே செய்தவர்களிடம் விசாரித்த போது கோவையைச் சேர்ந்த தனியார் சர்வே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், கோவையில் உள்ள முன்னணி தொழிலதிபருக்காக சர்வே செய்ய வந்ததாகவும் தெரிவித்தனர். டிரோன் சர்வே செய்ய காவல்துறை, வருவாய்த்துறை என எங்கும் அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதை அடுத்து சர்வே செய்ய வந்தவர்கள், 'அனுமதி பெறாமல் சர்வே செய்தது தவறு. இனி இந்த தவறை செய்ய மாட்டோம். அனைத்து துறையிலும் உரிய அனுமதி பெற்ற பிறகு எங்களுக்கு அனுமதி அளித்த நிலங்களில் மட்டும் சர்வே செய்வோம்' என எழுதி தந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் அவர்களை விடுவித்தனர். இதனால் 4 மணி நேரம் பரபரப்பு நிலவியது.